ஐபிஎல் தொடரில் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் ஆடலாம் என்ற இம்பேக்ட் விதிமுறையால் பந்துவீச்சாளர்கள் மீது அதிகப்படியான அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இம்பேக்ட் வீரர் என்ற புதிய ரூல் அறிமுகமான பிறகு, 12 வீரர்கள் விளையாடும் நிலை எட்டியுள்ளதால் பேட்ஸ்மேன்கள் விக்கெட் விழுமோ என்ற எந்தவிதமான அழுத்தமும் இல்லாமல் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வருகின்றனர். இதனால் பந்துவீச்சாளர்களிடையே அழுத்தமும், பயமும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட முறை 200 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டதும், 287, 277, 266, 262, 261, 261 என 6 முறை 250 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டதும் பந்துவீச்சாளர்களின் பரிதாப நிலையை எடுத்துக்காட்டுகிறது. அடித்தால் 200 ரன்கள் என ஆடிவரும் ஒவ்வொரு அணிகளும், பந்துவீச்சாளர்களை விட பேட்ஸ்மேன்களை மட்டுமே இம்பேக்ட் வீரர்களாக அதிகமாக பயன்படுத்திவருகின்றனர். இதனால் அதிகளவு 8 பேட்ஸ்மேன்கள் அணியில் இடம்பெறும் வாய்ப்பு ஒவ்வொரு அணிக்கும் கிடைக்கிறது. இதனால் பந்துவீச்சாளர்கள் அதிகமாக அழுத்ததை சந்தித்து வருகின்றனர்.
பந்துவீச்சாளர்களுக்கு தொடர்ந்து ஏற்பட்ட மோசமான அனுபவத்திற்கு பிறகு, பல கிரிக்கெட் வீரர்கள் “11 பேர் ஆடுவது தான் கிரிக்கெட், ஒன்று ஆடுகளத்தை மாற்றுங்கள் அல்லது இம்பேக்ட் விதிமுறையை நீக்குங்கள்” என்ற கருத்தை முன்வைத்தனர். தொடர்ந்து இந்த விதிமுறை குறித்த விவாதங்கள் நடந்துகொண்டே தான் இருக்கின்றன.
ஆல்ரவுண்டர்களின் தேவையை குறைக்கிறது என்று ரோகித் சர்மா ஆரம்பித்து வைத்த இம்பேக்ட் விதிமுறை குறித்த விவாதமானது பல முன்னாள் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் வரை தாண்டி தற்போதும் விவாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் சர்ச்சைக்குரிய விதிமுறை குறித்து பேசியிருக்கும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, இம்பேக்ட் பிளேயர் விதிமுறை நிரந்தரமானது அல்ல என்று தெரிவித்துள்ளார்.
மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெய் ஷா, "இம்பாக்ட் பிளேயர் விதிமுறையானது ஒரு சோதனை முயற்சி போன்றது தான். நாங்கள் அதை மெதுவாக செயல்படுத்தியுள்ளோம். இந்த விதிமுறையால் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய நன்மை என்னவென்றால், இரண்டு இந்திய வீரர்கள் ஒவ்வொரு ஆட்டத்திலும் வாய்ப்பு பெறுகிறார்கள், இது மிக முக்கியமானது. நாங்கள் வீரர்கள், உரிமையாளர்கள் மற்றும் ஒளிப்பரப்பாளர்களிடம் கலந்தாலோசிப்போம். இந்தவிதிமுறை நிரந்தரமானது அல்ல, ஆனால் அதேநேரம் இது உடனடியாக போகும் என்று நான் கூறவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
வீரர்களிடம் கலந்து பேசிய பிறகு முடிவெடுக்கப்படும் என்று கூறிய அவர், “இந்த விதிமுறை விளையாட்டை கடினமான போட்டியாக மாற்றுகிறதா இல்லையா என்பதை நாம் பார்த்துவருகிறோம். இதுபோன்ற சூழலில், ஒரு வீரர் கூட இது சரியில்லை என்று உணர்ந்தால், நாங்கள் அவர்களுடன் நிச்சயம் பேசுவோம். ஆனால் இதுவரை யாரும் எங்களிடம் எதுவும் சொல்லவில்லை, இருப்பினும் உலகக் கோப்பைக்குப் பிறகு இதுகுறித்து பேசி முடிவு எடுக்கப்படும்” என்று கூறினார்.