T 20 உலகக்கோப்பையுடன் இந்திய அணி ட்விட்டர்
T20

டி20 உலகக்கோப்பை | வெற்றி பேரணியால் திக்குமுக்காடிய மும்பை... ரூ.125 கோடி பரிசுத்தொகை தந்த பிசிசிஐ!

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி பேரணி, மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்திய அணியினருக்கு பிசிசிஐ சார்பில் 125 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

PT WEB

டி20 உலகக்கோப்பையோடு நேற்று நாடுதிரும்பிய இந்திய அணி, நேற்று காலை டெல்லியில் பிரதமர் மோடியிடம் வாழ்த்து பெற்றனர்.

டி 20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியுடன் பிரதமர் மோடி

தொடர்ந்து டெல்லியில் இருந்து மும்பை வந்த இந்திய அணியினர், திறந்தவெளி வேனில் வான்கடே மைதானத்தை நோக்கி புறப்பட்டனர். அரபிக்கடலின் ஓரம் உள்ள மரைன் டிரைவ் பகுதியில் மதியம் முதலே குவிந்திருந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள், இந்திய அணியினரை ஆரவாரத்தோடு வரவேற்றனர்.

கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட சாம்பியன்கள், பயிற்சியாளர் டிராவிட், பிசிசிஐ நிர்வாகிகள் வாகனத்தில் செல்ல, கடலுக்கு அருகில் மற்றொரு கடல் உருவானபோது போல் ரசிகர்கள் அலைகடலென திரண்டு, இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

“இந்தியா.. இந்தியா” எனவும், வீரர்களின் பெயர்களை கூறியும் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். ரோகித் சர்மாவும், விராட் கோலியும் இணைந்து உலக கோப்பையை உயரே தூக்கி காட்டியபோது, ரசிகர்களின் கோஷம் விண்ணைப்பிளந்தது.

பாராட்டு மழையோடு, வான்மழையும் சேர்ந்து, கிரிக்கெட் வீரர்களை உற்சாகப்படுத்தியது. வீரர்கள் சென்ற திறந்தவெளி வேன், ரசிகர்களின் வெள்ளத்தில் இன்ச் இன்சாக நகர்ந்து வான்கடே மைதானத்தில் புகுந்தது. மைதானத்தில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இந்திய அணியினரை உற்சாகம் பொங்க கூக்குரலிட்டு வரவேற்றனர்.

சாம்பியன்ஸ் என்ற ஜெர்சி அணிந்துகொண்டு மைதானத்தில் வெற்றிக் களிப்போடு உள்ளே நுழைந்த இந்திய வீரர்கள், சினிமா பாடல்களுக்கு தங்களை மறந்து ஆனந்த நடனமிட்டனர்.

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக் கோப்பையை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த வீரர்களுக்கு, பிசிசிஐ சார்பில் 125 கோடி ரூபாய் பரிசுத் தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது.