இலங்கை vs பங்களாதேஷ் pt web
T20

SL vs BAN | அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கும் கத்துக்குட்டி அணிகள்; இலங்கையை வீழ்த்தியது வங்கதேசம்

Angeshwar G

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை பரபரப்பாக நடந்து வருகிறது. கிரிக்கெட் வரலாற்றில் ஜாம்பவான்களாக இருந்த அணிகளை கத்துக்குட்டி அணிகள் வீழ்த்தி சாதனை படைத்து வருகின்றன. இந்நிலையில் 15 ஆவது லீக் போட்டியில் குரூப் டி-யில் இடம்பெற்றுள்ள இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இலங்கை அணி சீட்டுக்கட்டுகளைப் போல் சரிந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 124 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நிசன்கா 47 ரன்களை எடுத்தார். சிறப்பாக பந்துவீசிய பங்களாதேஷ் அணியில் முஸ்தபிசூர், ரிஷாத் ஹூசைன் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். டஸ்கின் அஹமத் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

பின்னர் 125 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணியும் அடுத்தடுத்த விக்கெட்களை இழந்து தடுமாறியது. அந்த அணியில் லிட்டன் தாஸ் மற்றும் தௌஹித் மட்டுமே குறிப்பிடத்தக்க ரன்களை சேர்த்தனர். லிட்டன் தாஸ் 36 ரன்களையும், தௌஹித் 40 ரன்களையும் எடுத்திருந்தனர். இதில் தௌஹித் 20 பந்துகளில் அதிரடியாக ஆடி, 4 சிக்சர்களை அடித்து 40 ரன்களை எடுத்தார்.

ஆனாலும் திணறி திணறியே ஆடிய பங்களாதேஷ் அணி 19 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 125 ரன்களை எடுத்து 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை அணி சார்பில் துஷாரா 4 விக்கெட்களை வீழ்த்தினார். ஆட்டநாயகனாக ரிஷாத் ஹூசைன் தேர்வு செய்யப்பட்டார்.

ஆட்டத்தில் தோற்றாலும் இலங்கை அணியின் கேப்டன் ஹசரங்கா, மலிங்காவின் சாதனையை முறியடித்துள்ளார். இன்றைய போட்டியில் அவர் இரண்டு விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணிக்காக அதிக விக்கெட்களை வீழ்த்தி முதலிடம் பிடித்தார். இதுவரை அவர் 108 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். மலிங்கா 107 விக்கெட்களை வீழ்த்தி இருந்ததே சாதனையாக இருந்தது.