2014-ம் ஆண்டு முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகமானாலும், தன்னுடைய பெயரை வெளி உலகத்திற்கு தெரியப்படுத்த ஷசாங் சிங்கிற்கு 10 வருட கடினமான நேரங்கள் தேவைப்பட்டது. அதுவும் தனக்கு பதிலாக வேறொரு வீரரை தான் பஞ்சாப் அணி எடுக்க நினைத்தார்கள் என்ற செய்தி கேட்டபிறகும், தன்னுடைய திறமையை வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பாகவே அந்த 32 வயது இளைஞர் தனக்காக ஒரு இடத்தை எதிர்ப்பார்த்து காத்திருந்தார்.
தற்போது “Find of the 2024 IPL" என பல ஜாம்பவான் வீரர்களாலும் புகழப்படும் ஷசாங் சிங், தன்னுடைய அபாரமான பேட்டிங் திறமையால் ரசிகர்களின் விருப்பமான வீரராக மாறியுள்ளார். சொல்லப்போனால் மிடில் ஆர்டர் வீரர் இடம் தான் உலகக்கோப்பையில் இந்தியாவிற்கு பெரிய பிரச்னை, அதனை ஷசாங் சிங் தீர்ப்பார் என சொல்லுமளவு தன்னுடைய சில இன்னிங்ஸ்களிலேயே கிரிக்கெட் உலகை மிரட்டியுள்ளார் ஷசாங்.
வேறொரு வீரருக்கு மாற்று வீரர் தான் நான் என்ற ஒரு மோசமான டேக் லைனோடு களமிறங்கிய ஷசாங் சிங், தன்னுடைய முதல் ஐபிஎல் போட்டியில் 0 ரன்னில் வெளியேறி மோசமான ஒரு தொடக்கத்தை பெற்றார். அப்போது தன்னுடைய சகவீரரான ஜானி பேர்ஸ்டோவின் வார்த்தைகள் தனக்கு எப்படி நம்பிக்கை அளித்தது என்பதை ஷசாங் சிங் வெளிப்படுத்தியுள்ளார்.
மிகப்பெரிய டி20 ரன் சேஸிங்கில் பெரிய பங்காற்றிய ஷசாங் சிங், தன்னுடைய முதல் ஐபிஎல் போட்டியில் சந்தித்த மோசமான அனுபவத்தையும், அப்போது பேர்ஸ்டோ எப்படி தன்னை மீட்டெடுத்தார் என்பதையும் பகிர்ந்துள்ளார்.
ஸ்போர்ட்ஸ்டார் உடனான உரையாடலில் பேசியிருக்கும் ஷசாங் சிங், “எங்கள் சீசனின் தொடக்க போட்டியில் (மார்ச் 23 அன்று டெல்லி கேப்பிடல்ஸுக்கு எதிராக) என்னுடைய முதல் வாய்ப்பிலேயே 0 ரன்னில் வெளியேறி மோசமான ஒரு மனநிலைக்கு தள்ளப்பட்டேன். அப்போது நான் மிகவும் மனவேதனையுடன் டக்-அவுட்டில் சோகமாக உட்கார்ந்திருந்தேன். திடீரென்று யாரோ என்னைப் பின்னால் இருந்து தட்டினார்கள், நான் சோகமாக அமர்ந்திருந்ததை பார்த்த ஜானி பேர்ஸ்டோ 'நீங்கள் சிரிப்பதை நான் தற்போது பார்க்கவேண்டும், அப்படியில்லை என்றால் இன்றிலிருந்து உங்களிடம் பேசுவதை நான் நிறுத்திவிடுவேன் என்று கூறினார். அப்போதிலிருந்து அவருடைய வார்த்தையை நான் மனதில் வைத்துக் கொண்டேன்” என்று பேசியுள்ளார்.
மேலும் தன்னுடைய திறமைக்கு மீண்டும் உயிர் கிடைத்துள்ளது என்று மகிழ்ச்சியாக பேசிய அவர், “என்னுடைய திறமைக்கான வாய்ப்பிற்காக நான் உள்நாட்டு கிரிக்கெட்டிலேயே சுற்றிக்கொண்டிருந்தேன். அதுவரை எப்படி இருந்தேன் என எனக்கு தெரியவில்லை, ஆனால் தற்போது நான் என்னுடைய திறமையால் மீண்டும் உயிர் பிழைத்துள்ளேன். தற்போது யாராவது என்னை ஒரு சிறந்த கண்டுபிடிப்பு என்று குறிப்பிடும்போது நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன். இறுதியில் என்னுடைய திறமையை வெளிப்படுத்த இந்த ஐபிஎல் சீசன் எனக்கு பல வாய்ப்புகளை வழங்கியது” என்று மகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.