2024 டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து ஜூலை 27 முதல் ஆகஸ்டு 7ம் தேதிவரை, 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடவிருக்கிறது.
முதலில் தொடர்முழுவதும் மூத்த வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா மூன்று பேரும் பங்கேற்க மாட்டார்கள் என கூறப்பட்ட நிலையில், தற்போது அனைவரும் அணிக்கு திரும்பியுள்ளனர்.
அதற்கும் மேல், “ஹர்திக் இருந்தும் சூர்யாவிற்கு டி20 கேப்டன்சி, டி20 தொடரில் சுப்மன் கில்லுக்கு துணைகேப்டன் பதவி, ரவிந்திர ஜடேஜா அணியில் இல்லை, ருதுராஜுக்கு இரண்டு அணியிலும் வாய்ப்பு மறுப்பு, ரியான் பராக்கிற்கு இரண்டு அணியிலும் வாய்ப்பு, சஞ்சு சாம்சன் மற்றும் ரிங்கு சிங்கிற்கு ஒருநாள் அணியில் வாய்ப்பு மறுப்பு, ஹர்சித் ரானா அணியில் சேர்ப்பு” என பல குழப்பங்களை அணி அறிவிப்பு ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை தொடரிலிருந்து புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றிருக்கும் கவுதம் கம்பீர், இவ்வளவு குழப்பத்தை ஏற்படுத்திவிட்டு எப்படி அணியை கட்டமைக்க போகிறார் என்ற கவலை ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் ருதுராஜ் கெய்க்வாட் நீக்கம் குறித்து தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் முன்னாள் இந்திய வீரர் பத்ரிநாத்.
கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்டும் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து ஆதங்கம் தெரிவித்த பத்ரிநாத், “அணியில் மற்றதையெல்லாம் கூட விட்டுவிடலாம், ஆனால் வாய்ப்பு கிடைத்த தொடர்களில் எல்லாம் அபாரமாக ஆடி 70 சராசரி வைத்திருக்கும் ருதுராஜ் கெய்க்வாட் நீக்கம் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியாகவும் ஏற்கமுடியாததாகவும் இருக்கிறது. ஒரு சீசனில் அடித்துவிட்டதால் ரியான் பராக் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமானால், தொடர்ச்சியாக உள்நாட்டு கிரிக்கெட்டிலிருந்து ஐபிஎல் தொடர்வரை ரன்களை குவித்து வரும் ருதுராஜுக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
ஒருவேளை இந்திய அணியில் இடம்பெற BADBOY இமேஜ் இருந்தால் போதும் போல, நடிகைகளுடன் கிசுகிசு, புரோமோசன்ஸ், உடம்பில் பச்சைக்குத்திக்கொண்டு பேட்-பாய் இமேஜ் வைத்திருந்தால் இந்திய அணியில் இடம் கிடைத்துவிடும் போல தோன்றுகிறது. ருதுராஜுக்கு நீதிவேண்டும் என சொல்லவேண்டும் போல இருக்கிறது, இந்த இந்திய அணியின் தேர்வு” என தன்னுடைய யூ-டியூப் உரையாடல் நிகழ்ச்சியில் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
இந்திய அணிக்காக 20 சர்வேதேச டி20 இன்னிங்ஸ்களில் விளையாடியிருக்கும் ருதுராஜ் கெய்க்வாட், ஒரு சதம் மற்றும் 4 அரைசதங்கள் உட்பட 40 சராசரி மற்றும் 143 ஸ்டிரைக்ரேட்டுடன் 633 ரன்கள் குவித்துள்ளார்.