பத்ரிநாத் - நடராஜன் X
T20

தமிழ்நாடு வீரர்கள் மட்டும் 2 மடங்கு உழைக்கணுமா? காலங்காலமா வஞ்சிக்கப்படுகிறோம்! பத்ரிநாத் ஆதங்கம்!

டி20 உலகக்கோப்பையில் ஒரு தமிழ்நாடு வீரர் கூட இல்லாத நிலையில், முன்னாள் இந்திய அணி வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Rishan Vengai

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே “நடராஜன்” என்ற பெயர் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காக மாறியது. பல்வேறு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஏன் நடராஜனை எடுத்துச்செல்லவில்லை என்ற கேள்வியையும், அணிக்குள் தேர்வுசெய்யப்பட்ட பவுலர்களை விடவா நடராஜன் மோசமாக பந்துவீசியுள்ளார் என்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

நடராஜன்

நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டால், டி20 உலகக்கோப்பைக்கு தேர்வாகலாம் என டீம் தேர்வுக்கான பெரிய அளவுகோலாக ஐபிஎல் தொடர் பார்க்கப்பட்ட நிலையில், சன்ரைசர்ஸ் அணியில் இடம்பெற்று சிறப்பாக விளையாடிவரும் தமிழக வீரர் நடராஜன் ரிசர்வ் வீரராக கூட தேர்வுசெய்யப்படவில்லை என்பது சர்ச்சையாக மாறியுள்ளது.

வேகப்பந்துவீச்சாளராக டி20 உலகக்கோப்பையில் ”அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், கலீல் அகமது, ஆவேஷ் கான்” முதலிய வீரர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ள நிலையில், சரியாக செயல்படாத நிலையிலும் மற்ற வீரர்கள் உலகக்கோப்பைக்கு செல்கிறார்கள், ஆனால் தமிழ்நாடு வீரர்கள் மட்டும் இரண்டு மடங்கு perform செய்தாலும் தேர்வுசெய்யப்படாமல் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று முன்னாள் தமிழக வீரர் பத்ரிநாத் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ்நாடு வீரர்கள் மட்டும் 2 மடங்கு உழைக்கணுமா?

Star Sports Tamil சேனலில் பேசியிருக்கும் பத்ரிநாத், “உலகக்கோப்பைக்கான வீரர்கள் தேர்வில் நிறைய கேள்விகளுக்கு பதில் தெரிய வேண்டும். மற்ற வீரர்கள் ஒரு மடங்கு perform செய்தால் உலகக்கோப்பைக்குள் சென்றுவிடலாம், ஆனால் தமிழ்நாடு வீரர்கள் மட்டும் ஏன் இரண்டு மடங்கு உழைத்தாலும் உலகக்கோப்பைக்கு எடுத்துசெல்லப்படாமல் புறக்கணிக்கப்படுகிறார்கள். ஏன் தொடர்ந்து தமிழ்நாடு வீரர்கள் மட்டும் பாதுகாக்கப்படாமல் புறக்கணிக்கப்படுகிறார்கள்.

அஸ்வின், முரளிவிஜய் போன்ற வீரர்கள் 2 போட்டிகளில் சரியாக விளையாடாமல் போனால் மட்டும் கேள்வி கேட்கிறார்கள், ஆனால் மற்ற வீரர்களுக்கு எதிராக யாரும் கேள்வி எழுப்புவதில்லை. உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் நடராஜன் நிச்சயம் இடம்பெற்றிருக்க வேண்டும். காலங்காலமாக இப்படித்தான் தமிழக வீரர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். வேறு யாரும் இதற்கு குரல் கொடுக்காத நிலையில், தற்போது நான் இதை கேட்க விரும்புகிறேன்” என்று தன்னுடைய கோவத்தையும் ஆதங்கத்தையும் பத்ரிநாத் வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து ரசிகர்களும் நடராஜனுக்காக ஆதரவு குரல் கொடுத்துவருகின்றனர். மே 25ம் தேதிவரை அணியை அப்டேட் செய்வதற்கான கால அவகாசம் உள்ளது என கூறப்படும் நிலையில், இந்திய அணியில் மாற்றங்கள் செய்யப்படுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.