Mitchell Starc, right, talks to his captain Mitchell Marsh  Ricardo Mazalan
T20

AUSvENG | வெற்றிக் கணக்கைத் தொடங்குமா நடப்பு சாம்பியன்? ஆஸ்திரேலியாவுடன் இன்று மோதல்..!

முதல் போட்டியில் 36 பந்துகளில் 67 ரன்கள் விளாசியதோடு மட்டுமல்லாமல், 3 ஓவர்கள் பந்துவீசி 19 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார் ஸ்டாய்னிஸ்.

Viyan
போட்டி எண் 17: ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து
குரூப்: பி
மைதானம்: கென்ஸிங்டன் ஓவல், பிரிட்ஜ்டவுன், பார்படாஸ்
போட்டி தொடங்கும் நேரம்: ஜூன் 8, இந்திய நேரப்படி இரவு 10.30 மணி

வெற்றிப் பயணத்தைத் தொடருமா ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை முதல் போட்டியில் ஓமனுக்கு எதிராக நன்றாக ஆடி வெற்றி பெற்றிருக்கிறது. அந்த அணியின் டேவிட் வார்னர், மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். கடினமான ஆடுகளம் என்பதை உணர்ந்த வார்னர், தன் அனுபவத்தைப் பயன்படுத்தி விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டார். அவர் இருப்பது அணிக்கு அனுபவம், நம்பிக்கை அனைத்தையும் ஒருசேரக் கொடுக்கிறது. சூழலுக்கு ஏற்ப அந்த அணியின் பௌலர்களும் நன்றாகப் பந்துவீசினார்கள். ஸ்டாய்னிஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆல் ரவுண்டராகக் கலக்கியதோடு மட்டுமல்லாமல் ஆட்ட நாயகன் விருதும் வென்றார்.

இருந்தாலும் அந்த அணிக்குக் கவலைகள் இல்லாமல் இல்லை. பேட்டிங்கில் ஒருசில வீரர்களின் செயல்பாடு சற்று சுமாராகவே இருக்கிறது. ஐபிஎல் தொடரின் கடைசி கட்டத்தில் தடுமாறிய டிராவிஸ் ஹெட் இன்னும் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. காயத்திலிருந்து மீண்டும் வந்திருக்கும் கேப்டன் மிட்செல் மார்ஷாலும் அவருடைய வழக்கமான ஆட்டத்தை வெளிக்காட்ட முடியவில்லை. அடுத்தது மேக்ஸ்வெல்... இன்னும் டக் அவுட் ஆகிக்கொண்டு தான் இருக்கிறார். ஓமனுக்கு எதிராகவும் கூட மேக்ஸி டக் அவுட் தான் ஆனார். இவர்களின் ஃபார்ம் தான் ஆஸ்திரேலிய அணிக்கு கவலை தருவதாக இருக்கிறது. இங்கிலாந்தின் பலமான பந்துவீச்சுக்கு எதிராக இவர்கள் தங்களின் பழைய ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறினால் ஆஸ்திரேலியாவுக்கு சிக்கல் தான்.

முதல் வெற்றியைப் பதிவு செய்யுமா இங்கிலாந்து

இங்கிலாந்து அணிக்கு இந்த உலகக் கோப்பை சரியாகத் தொடங்கவில்லை. ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான அந்த அணியின் முதல் போட்டியில் மழையால் ரத்து செய்யப்பட்டது. அதனால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளியே கொடுக்கப்பட்டது. எளிதாக வெற்றி பெறவேண்டிய அந்தப் போட்டியில் அந்த அணி ஒரு புள்ளியை இழந்தது. அதனால் அந்த அணி இப்போது இக்கட்டான நிலையில் இருக்கிறது. ஒருவேளை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து தோற்று, ஸ்காட்லாந்து அணி ஓமனுக்கு எதிராக வென்றால் இங்கிலாந்து அணியால் அதிகபட்சம் 5 புள்ளிகள் தான் பெற முடியும். ஒருவேளை ஸ்காட்லாந்து நல்ல ரன்ரேட் வைத்திருந்தால் அவர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு கூடக் கிடைக்கும். அப்படியொரு நிலை வராமல் இருக்க, இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வென்று விடுவது நல்லது.

ஸ்காட்லாந்து எதிராக அவர்கள் பந்துவீசிய 10 ஓவர்களிலும் சுமாராகவே செயல்பட்டனர். 90 ரன்களை வாரி வழங்கிய அந்த அணி ஒரு விக்கெட் கூடக் கைப்பற்றவில்லை. முதல் போட்டியில் இடது கை ஃபாஸ்ட் பௌலர், இடது கை ஸ்பின்னர் போன்ற ஆப்ஷன்களே இல்லாமல் களமிறங்கியது அந்த அணி. அதனால் ஒருவேளை இந்தப் போட்டியில் அவர்கள் சாம் கரணைக் களமிறக்கலாம். அவர் பேட்டிங்கிலும் ஒரு கூடுதலான இடது கை ஆப்ஷன் கொடுப்பார்.

பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்:

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் (கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா, நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசில்வுட்

இங்கிலாந்து: ஃபில் சால்ட், ஜாஸ் பட்லர் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), வில் ஜேக்ஸ், ஜானி பேர்ஸ்டோ, ஹேரி ப்ரூக், மொயீன் அலி, லியாம் லிவிங்ஸ்டன், சாம் கரன், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷீத், மார்க் வுட்

கவனிக்கவேண்டிய வீரர்கள்


ஆஸ்திரேலியா - மார்க்ஸ் ஸ்டாய்னிஸ்: முதல் போட்டியில் 36 பந்துகளில் 67 ரன்கள் விளாசியதோடு மட்டுமல்லாமல், 3 ஓவர்கள் பந்துவீசி 19 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார் ஸ்டாய்னிஸ். மிட்செல் மார்ஷ், மேக்ஸ்வெல் போன்றவர்கள் ஃபார்ம் இல்லாமல் தவிக்கும்போது இவரது பேட்டிங் இன்னும் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

இங்கிலாந்து - ஜாஸ் பட்லர்: ஆஸ்திரேலிய அணிக்கு நல்ல தொடக்கம் கொடுக்காமல் இருப்பது மிகவும் முக்கியம். அதனால் ஓப்பனர்கள் நல்லபடியான ஸ்கோர் எடுக்கவேண்டும். கேப்டன் பட்லர் முன் நின்று அணியை வழிநடத்தினால் தான் வெற்றிக் கணக்கைத் தொடங்க முடியும்.

கணிப்பு: இந்த ஆடுகளத்தில் 160 - 170 ரன்கள் நல்ல ஸ்கோராகப் பார்க்கப்படும். இதற்கு மேல் அடிக்கக்கூடிய பேட்டிங் பலம் இங்கிலாந்துக்கு இருக்கிறது. எனவே அவர்கள் இந்தப் போட்டியை வெற்றி பெற வாய்ப்பு அதிகம்.