ஆஸ்திரியா - ரொமானியா web
T20

அடேங்கப்பா..! '6 பந்தில் 41 ரன்கள் விளாசல்..' - 2 ஓவரில் 61 ரன்கள் சேஸ்செய்து மிரள வைத்த ஆஸ்திரியா!

Rishan Vengai

2024-ம் ஆண்டுக்கான ஐரோப்பியன் கிரிக்கெட் (ECI) T10 தொடரில் ருமேனியா மற்றும் ஆஸ்திரிய கிரிக்கெட் அணிகள் கடந்த ஞாயிற்றுகிழமை பலப்பரீட்சை நடத்தின.

புக்கரெஸ்டில் ஜூலை 14 அன்று நடைபெற்ற தொடரின் 7வது போட்டியில், ருமேனியா நிர்ணயித்த 168 ரன்கள் இலக்கை எதிர்கொண்ட ஆஸ்திரிய கிரிக்கெட் அணி, போட்டியின் கடைசி இரண்டு ஓவர்களில் கற்பனை செய்ய முடியாத 61 ரன்களை துரத்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

2 ஓவரில் 61 ரன்கள் விளாசல்..

போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ருமேனியா அணியில், 11 பவுண்டரிகள் 8 சிக்சர்கள் என அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய விக்கெட் கீப்பர் அரியன் முகமது 39 பந்தில் சதமடித்து அசத்த, உடன் தொடக்க ஆட்டக்காரர் முஹம்மது மொயிஸ் 14 பந்தில் 42 ரன்கள் என விளாச 10 ஓவர் முடிவில் 167 ரன்களை குவித்தது ருமேனியா அணி.

ஆஸ்திரியா

168 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்டிய ​​ஆஸ்திரியா அணி 8 ஓவர்களில் 107/3 என்ற நிலையில் இருந்தது. ஆனால் 9வது ஓவரில் அகிப் இக்பால் ஆடிய ருத்ரதாண்டவம் கிரிக்கெட் உலகை பிரமிக்க வைத்தது, மன்மீத் கோலி வீசிய 9வது ஓவரில் “1, 5W, 6, 4, 6, 7NB, 0, 7NB, WD, 4" என 41 ரன்களை விரட்டிய இக்பால் ரன்சேஸிங்கை ஆஸ்திரியா பக்கம் எடுத்துவந்தார்.

கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டபோது, ​​இம்ரான் ஆசிப் மற்றும் அகிப் இக்பால் ஆகியோர் சாமிகா பெர்னாண்டோவை 4 சிக்சர்களுக்கு அழைத்துச் சென்று 1 பந்து மீதமிருக்கையில் போட்டியை முடித்துவைத்தனர். முடிவில் கடைசி 2 ஓவரில் 61 ரன்களை விரட்டிய ஆஸ்திரியா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியை பதிவுசெய்தது.