India vs Aus, WTC Final Twitter
T20

140 வருட மோசமான சாதனை வைத்திருக்கும் ஆஸ்திரேலியா! WTC கோப்பை வெல்ல இந்தியாவிற்கு பெரிய வாய்ப்பு!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன் இறுதிப்போட்டியானது இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் வரும் ஜுன் 7ஆம் தேதி நடைபெறுகிறது.

Rishan Vengai

2021 முதல் 2023 வரையிலான டெஸ்ட் தொடர்களில், எந்த 2 உலக கிரிக்கெட் அணிகள் அதிக தொடர்களில் வென்று முதல் 2 இடங்களை பிடிக்கிறதோ, அந்த இரண்டு அணிகள் உலக டெஸ்ட் கோப்பைக்கான இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்நிலையில் கடந்த 3 வருடங்களாக சிறப்பாக விளையாடிவரும் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள், டெஸ்ட் உலகக்கோப்பைக்கான இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் வரும் 7ஆம் தேதி 2 அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. உலகின் தலைசிறந்த 2 அணிகளுக்கு இடையேயான மோதல் என்பதால், இந்த இறுதிப்போட்டியானது உலக கிரிக்கெட் ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பாக இருந்துவருகிறது.

8 வருடங்களாக ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா வைத்திருக்கும் ரெக்கார்டு!

ஒரு காலத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய அணி மோதுகிறது என்றாலே, இந்திய ரசிகர்கள் அனைவருக்கும் “இது எதுக்கு நடந்துகிட்டு... கோப்பையை தூக்கி அவங்ககிட்டயே கொடுத்துட வேண்டிய தானே” என்ற எண்ணம் தான் இருக்கும். ஏனென்றால் ஒவ்வொருமுறையும் இந்திய அணி வெல்லுமா வெல்லுமா என்று எதிர்ப்பார்த்து ஏமாற்றம் அடைந்தது மட்டுமே மிச்சமாக இருந்துவந்தது.

Virat kohli

விராட் கோலி இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு உலகத்தின் எந்த அணியை வேண்டுமானாலும் இந்திய அணியால் வீழ்த்த முடியும் என்ற நிலையை உருவாக்கினார். அது வெறும் வார்த்தைக்கான அழகியலாய் மட்டுமில்லாமல் செனா நாடுகள் என்று அழைக்கப்படும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, சவுத் ஆப்ரிக்கா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கே சென்று தொடர்களை வென்று இந்தியா ஆதிக்கம் செலுத்தியது.

விராட் கோலி விலகி டெஸ்ட் கேப்டன்சியை ரோகித் சர்மா பெற்றபிறகும் இந்தியா தொடர்ந்து சிறப்பாகவே விளையாடிவருகிறது. கடந்த 2019-2021 ஆண்டுக்கான WTC பைனலின் போது இந்தியா வெற்றிபெறும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிராக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்நிலையில் தற்போது ரோகித் சர்மா தலைமையிலாவது டெஸ்ட் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருந்துவருகிறது.

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரையில் சொந்த மண்ணாக இருந்தாலும் சரி, வெளிநாட்டு மண்ணாக இருந்தாலும் சரி, கடந்த 8 வருடங்களாக இந்திய அணிக்கு எதிராக ஒரு தொடரை கூட வெல்ல முடியாமல் தடுமாறி வருகிறது. இந்த புள்ளிவிபரம் இந்திய அணிக்கு சாதகமாக இருந்தாலும், கோப்பைக்கான போட்டியானது ஒரேயொரு போட்டி மட்டும் தான் என்பதால் இந்தியா என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஓவல் மைதானத்தில் 140 வருடங்களாக வைத்திருக்கும் மோசமான ரெக்கார்ட்!

WTC டெஸ்ட் கோப்பைக்கான இறுதிப்போட்டியானது இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் ஜூன் 7 முதல் ஜூன் 11ஆம் தேதி வரையில் 5 நாள் போட்டியாக நடைபெறுகிறது. இந்நிலையில் ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியாவின் வெற்றி சதவீதமானது கடந்த 140 வருடங்களாக மிகவும் மோசமான ஒன்றாக இருந்துவருகிறது.

Aus

ஆஸ்திரேலியா அணி 1880ஆம் ஆண்டு தனது தான் முதல் டெஸ்ட் போட்டியை ஓவல் மைதானத்தில் விளையாடியது. அப்போதிலிருந்து இப்போது வரை 38 டெஸ்ட் போட்டிகளில் ஓவலில் விளையாடியிருக்கும் ஆஸ்திரேலியா அணி வெறும் 7 போட்டிகளில் மட்டுமே வெற்றியை பதிவு செய்துள்ளது. ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியாவின் வெற்றி சதவீதமானது வெறும் 18.42 சதவீதமாகவே இருந்துவருகிறது. அதுமட்டுமல்லாமல் கடந்த 50 ஆண்டுகளில் வெறும் 2 போட்டிகளில் மட்டுமே ஓவலில் ஆஸ்திரேலியா வென்றுள்ளது.

Aus in oval

ஆஸ்திரேலியாவின் இந்த மோசமான சாதனை ஒருபுறம் இருந்தாலும், இந்திய அணியும் பெரிய ரெக்கார்டை ஓவலில் வைத்திருக்கவில்லை. இந்தியா இதுவரை ஓவலில் விளையாடியிருக்கும் போட்டிகளில் 2 வெற்றி, 7 டிரா மற்றும் 5 ஆட்டங்களில் தோல்வி என சுமாரான ஆட்டத்தையே வைத்துள்ளது. ஆனால் ரோஹித் சர்மா தலைமையில் கடந்த 2021ல் நடந்த போட்டியில் இங்கிலாந்தை 157 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அசத்தியுள்ளது. இது கடந்த 40 ஆண்டுகளில் ஓவலில் நடந்த டெஸ்ட் போட்டியில் பெற்ற இந்தியாவின் முதல் வெற்றியாகும்.

ஓவல் மைதானத்தின் அருகே பயிற்சியை மேற்கொள்ளும் ஆஸ்திரேலியா!

ஓவல் மைதானத்திலிருந்து 20கிமீ அருகில் உள்ள பெக்கன்ஹாமில் ஆஸ்திரேலியா பயிற்சியை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்டர்களான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் லபுசனே இருவரும் இங்கிலாந்தில் விளையாடி வருவது, ஆஸ்திரேலியாவிற்கு சாதகமான ஒன்றாக மாறியுள்ளது. அதேபோல ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சுக்கு மாற்றுவீரர்களாக, மைக்கேல் நெஸ்ஸர் மற்றும் சீன் அபோட் இருவரும் இங்கிலாந்தில் நடைபெற்ற போட்டிகளில் விளையாடி சிறப்பாகவே தயாராகியுள்ளார்கள்.

Pujara / WTC

இந்திய அணியை பொறுத்தவரையில் இந்திய அணியின் தற்கால தடுப்புச்சுவர் என்று பார்க்கப்படும் சட்டீஸ்வர் புஜாரா இங்கிலாந்தில் தான் கிரிக்கெட் விளையாடிவருகிறார். அதுமட்டுமல்லாமல் அவர் தன்னுடைய சிறப்பான ஃபார்மில் தொடர்ந்து ரன்களை குவித்துவருவது இந்தியாவிற்கு சாதகமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஓவல் மைதானத்தில் அற்புதமான ஃபார்மில் இருந்துவரும் முகமது சிராஜ், முகமது ஷமி போன்ற வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.