arjun tendulkar, brett lee file image
T20

”அர்ஜுன் டெண்டுல்கர் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது” - ஆதரவு தெரிவித்த ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்!

”அர்ஜுன் டெண்டுல்கர் தன்னை விமர்சிப்பவர்களைக் கண்டுகொள்ளாது தன் பாதையை நோக்கிப் பயணிக்க வேண்டும்” என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரெட் லீ தெரிவித்துள்ளார்.

Prakash J

ஐபிஎல் போன்ற கிரிக்கெட் தொடர்கள் பல இளம் வீரர்களை உருவாக்கி வருகிறது. இந்திய வீரர்கள் மட்டுமல்லாது, உலகளவிலும் பல வீரர்களை, ஐபிஎல் அணிகளைச் சேர்ந்த கேப்டன்கள் உருவாக்கி வருகின்றனர். அதேநேரத்தில், ஒரு சில போட்டிகளில் ஏற்படும் தவறுகளால், சில வீரர்களின் எதிர்காலமும் பாழாகிறது. என்றாலும், அதிலிருந்து முன்னேறி மேலும் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு பின்னாளில் திறமையான வீரர்களாக உருவெடுக்கின்றனர்.

சில கேப்டன்கள் தொடர்ந்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதுதான், அதற்குக் காரணம்.

அந்த வகையில் தோனி, ரோகித் ஆகிய கேப்டன்கள் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பும் வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி வருகின்றனர். ஆனால், ஹர்திக் பாண்டியா போன்றோர் பாதிக்கப்படும் வீரர்களுக்கு மீண்டும் வாய்ப்பு தருவதில்லை. இதற்கு சமீபத்திய உதாரணம், கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெற்ற13வது லீக் போட்டியின்போது குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த யாஷ் தயாள், கடைசி ஓவரை வீசினார்.

Yash Dayal

இதில் அவரது நண்பரும் கொல்கத்தா அணி வீரருமான ரிங்கு சிங், தொடர்ந்து 5 பந்துகளில் 5 சிக்ஸர்களை அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அதுமுதல், ரிங்கு சிங் பிரபலமாக, யாஷ் தயாளோ பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டார்; இல்லை, ஓரங்கட்டப்பட்டார். அதற்குப் பின் நடைபெற்ற எந்தப் போட்டிகளிலும் அவர் களமிறக்கப்படவில்லை.

Arjun tendulkar

அதுபோல் மும்பை அணியில் இடம்பெற்றிருக்கும் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், பஞ்சாப் அணிக்கு எதிராக ஒரு ஓவரில் 31 ரன்களை வழங்கி, மோசமான சாதனை பட்டியலில் இடம்பிடித்தார். ஏற்கெனவே அவரது பந்துவீச்சு குறித்து பலரும் விமர்சனங்களை (வேகம் குறைவாக வீசுகிறார் உள்ளிட்ட) முன்வைத்த நிலையில், இன்றைய போட்டியில் (குஜராத் டைட்டன்ஸ் எதிராக) அர்ஜுனுக்கு வாய்ப்பு அளிக்கப்படாது எனப் பலரும் நினைத்தனர். ஆனால், ரோகித் சர்மா, அவருக்கு மீண்டும் ஒருமுறை வாய்ப்பு கொடுத்ததுடன், முதல் ஓவரையும் வீசச் செய்தார். அதன்படி, இன்றைய போட்டியில் இரண்டு ஓவர்கள் வீசி 9 ரன்களை மட்டுமே வழங்கியதுடன் 1 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார்.

இந்த நிலையில் அர்ஜுன் டெண்டுல்கரின் பந்து வீச்சுக்கு ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரெட் லீ ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ”அர்ஜுன் டெண்டுல்கரால் அனைத்துவிதமான பந்துகளையும் வீச முடியும். அவரது பந்துவீச்சு என்னை கவர்ந்துள்ளது. அவர், புதிய பந்தில் அற்புதமாக வீசுவதுடன், பவர்பிளே ஓவர்களிலும் அவரால் சிறப்பாக ஸ்விங் செய்ய முடிகிறது.

Arjun Tendulkar

மிடில் ஓவர்களில் தைரியமாக பந்தை வீசுகிறார். போதுமான அனுபவம் கிடைத்தபின் டெத் ஓவர்களை சிறப்பாக வீசுவார் என்றே நம்புகிறேன். அர்ஜுன் டெண்டுல்கருக்கு 23 வயது மட்டுமே ஆகிறது. இனிமேல்தான் முழுவதுமாய் கிரிக்கெட் விளையாட உள்ளார்.

சச்சினைப்போல் அர்ஜுனின் பாதையும் கடினமாக இருக்கும். இருப்பினும், அர்ஜுன் திறமைகளைக் கொண்டுள்ளார். அதனால், அவர் கூடிய விரைவில் 140 கி.மீ. வேகத்தில் பந்துவீசுவார்.
பிரெட் லீ

என்னைப் பொறுத்தவரை அர்ஜுன், யாருடைய விமர்சனங்களையும் காது கொடுத்து கேட்கக்கூடாது. சச்சினைப்போல் அர்ஜுனின் பாதையும் கடினமாக இருக்கும். இருப்பினும், அர்ஜுன் திறமைகளைக் கொண்டுள்ளார். அதனால், அவர் கூடிய விரைவில் 140 கி.மீ. வேகத்தில் பந்துவீசுவார். மும்பை அணி சூழலும், அனுபவமும் கிடைத்த பின்னரும், அவரின் வேகம் நிச்சயம் அதிகரிக்கும். அவர் வேகத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. ஏனென்றால் அவரால் எந்த அளவிற்கு வேகமாய் வீச முடியும் என்று எனக்கு நன்றாக தெரியும். அர்ஜுன் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறாரோ, அதனை தொடர்ந்து செய்ய வேண்டும். விமர்சிப்பவர்களை கண்டுகொள்ளாமல் பாதையை நோக்கி பயணிக்க வேண்டும்” என ஆதரவு தெரிவித்துள்ளார்.