australia web
T20

தொடர்ந்து 5வது வெற்றியைக் குறிவைக்கும் ஆஸ்திரேலியா.. வங்கதேசத்துக்கு எதிராக மோதுகிறது!

டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா vs வங்கதேசம் மோதும் போட்டியில், தொடர்ந்து 5வது வெற்றியைக் குறிவைக்கிறது ஆஸ்திரேலியா. அது நடக்குமா? அந்த அணியின் சாதக பாதகங்கள் என்னென்ன?

Viyan

போட்டி 44 (சூப்பர் 8): ஆஸ்திரேலியா vs வங்கதேசம்

மைதானம்: சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியம், நார்த் சவுண்ட், ஆன்டிகுவா

போட்டி தொடங்கும் நேரம்: ஜூன் 21, இந்திய நேரப்படி அதிகாலை 12.30 மணி

இந்த உலகக் கோப்பையில் இதுவரை:

ஆஸ்திரேலியா

போட்டிகள் - 4, வெற்றிகள் - 4, தோல்வி - 0, முடிவு இல்லை - 0

சிறந்த பேட்ஸ்மேன்: மார்கஸ் ஸ்டாய்னிஸ் - 3 இன்னிங்ஸ்களில் 156 ரன்கள்

சிறந்த பௌலர்: ஆடம் ஜாம்பா - 4 போட்டிகளில் 9 விக்கெட்டுகள்

ஆஸ்திரேலிய அணி இந்த உலகக் கோப்பையில் அசத்திக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு போட்டியிலும் நல்ல எளிதான வெற்றிகளைப் பதிவு செய்திருக்கிறது அந்த அணி. ஓமனுக்கு எதிராக 39 ரன்களில் தோற்று உலகக் கோப்பையைத் தொடங்கியவர்கள், இங்கிலாந்துக்கு எதிராக 36 ரன்களில் வெற்றி பெற்றனர். நமீபியாவுக்கு எதிராக 9 விக்கெட்டுகளில் வீழ்த்திய மார்ஷின் அணி, ஸ்காட்லாந்துக்கு எதிராக மற்றும் சற்று தடுமாறியது. இருந்தாலும் அந்தப் போட்டியையும் 5 விக்கெட்டுகளில் வென்றது ஆஸ்திரேலியா.

aus vs ban

வங்கதேசம்

போட்டிகள் - 4, வெற்றிகள் - 3, தோல்வி - 1, முடிவு இல்லை - 0

சிறந்த பேட்ஸ்மேன்: தௌஹித் ஹிரதோய் - 4 இன்னிங்ஸ்களில் 95 ரன்கள்

சிறந்த பௌலர்: தன்சிம் ஹசன் ஷகிப் - 4 போட்டிகளில் 9 விக்கெட்டுகள்

முதல் போட்டியிலேயே இலங்கையை 2 விக்கெட்டுகளில் வீழ்த்தி சிறப்பாக உலகக் கோப்பையைத் தொடங்கியது வங்கதேசம். அடுத்த போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக போராடிய அந்த அணி 4 ரன்களில் தோல்வியைத் தழுவியது. ஆனால் அடுத்த போட்டிகளில் நெதர்லாந்து மற்றும் நேபாள அணிகளை முறையே 25 ரன்களிலும் 21 ரன்களிலும் வீழ்த்தி சூப்பர் 8 வாய்ப்பை உறுதி செய்தது வங்கதேசம்.

ஆஸ்திரேலியாவை சமாளிக்குமா வங்கதேசம்?

ஆஸ்திரேலிய அணி இந்த உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடிக்கொண்டிருக்கிறது. வார்னர், டிராவிஸ் ஹெட் போன்றவர்கள் பேட்டிங்கில் அசத்துகிறார்கள். பௌலிங்கில் எல்லோருமே சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மார்கஸ் ஸ்டாய்னிஸோ பேட்டிங், பௌலிங் இரண்டிலும் அசத்திக்கொண்டிருக்கிறார். ஒவ்வொரு ஏரியாவிலும் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் அந்த அணி, பந்துவீச்சில் பல ரொடேஷன்களையும் செய்து பார்த்திருக்கிறது. அதனால் அனைத்து பௌலர்களுமே நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். கேப்டன் மிட்செல் மார்ஷ் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோரின் பேட்டிங் ஃபார்ம்தான் கவலை தருவதாக இருக்கிறது. பௌலிங்கிலும் மற்றவர்களை ஒப்பிடும்போது மேக்ஸ்வெல் சற்று அதிகமாக ரன் கொடுத்திருக்கிறார்.

stoinis

வங்கதேச அணியைப் பொறுத்தவரை பேட்டிங் சுமாராகத்தான் இருக்கிறது. ஆனால் அசத்தலான பௌலிங்கின் காரணமாக அந்த அணி லீக் சுற்றில் 3 போட்டிகளை வென்றது. தன்சிம் ஹசன் ஷகிப் 9 விக்கெட்டுகளும், முஸ்தாஃபிசுர் ரஹ்மான், ரிஷாத் ஹொசைன், டஸ்கின் அஹமது ஆகியோர் தலா 7 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருக்கிறார்கள். இப்படி மொத்த பௌலிங் யூனிட்டும் விக்கெட்டுகள் வீழ்த்துவது அவர்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறது. முதல் 3 போட்டிகளிலும் பெரிய பங்களிப்பைக் கொடுக்காத ஷகிப் அல் ஹசன், நேபாளத்துக்கு எதிராக அரைசதம் அடித்து கோதாவில் குதித்திருக்கிறார். ஆனால் இன்னும் அவர் பந்துவீச்சில் பெரிய தாக்கம் தெரியவில்லை. அவர் பௌலிங்கிலும் அசத்தினால் ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தலாம்.

பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்:

ஆஸ்திரேலியா: டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் (கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), டிம் டேவிட், பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

வங்கதேசம்: தன்சித் ஹசன், லிட்டன் தாஸ் (விக்கெட் கீப்பர்), நஜ்முல் ஹொசைன் ஷான்டோ (கேப்டன்), ஷகிப் அல் ஹசன், தௌஹித் ஹிரதோய், மஹமதுல்லா, ஜகெர் அலி, ரிஷாத் ஹொசைன், டஸ்கின் அஹமது, முஸ்தாஃபிசுர் ரஹ்மான்.

கவனிக்கவேண்டிய வீரர்கள்:

ஆஸ்திரேலியா - மார்கஸ் ஸ்டாய்னிஸ்: ஆடிய 3 இன்னிங்ஸ்களிலும் குறைந்தது 30 ரன்களாவது எடுத்திருக்கிறார் ஸ்டாய்னிஸ். இரண்டு அரைசதங்கள். போதாக்குறைக்கு 6 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தியிருக்கிறார். 4 போட்டிகளில் 2 ஆட்ட நாயகன் விருது வாங்கி அசத்தியிருக்கிறார். இவை இல்லாமல் வேறு யாரை கவனிக்க முடியும்!

stoinis

வங்கதேசம் - தன்சிம் ஹசன் ஷகிப்: ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டருக்கு இவர் நிச்சயம் பெரிய தலைவலியாய் இருப்பார். பவர்பிளேவில் அசத்திக்கொண்டிருக்கும் அவர், ஹெட் மற்றும் வார்னரை தடுமாறவைத்தால் வங்கதேசம் இன்னொரு அப்செட் அரங்கேற்றுவதைப் பற்றி கனவு காணலாம்.

கணிப்பு: ஆஸ்திரேலியா தொடர்ந்து ஐந்தாவது வெற்றியைப் பதிவு செய்யும்.