ashwin x
T20

'சின்னபசங்க கூடலாம் எதுக்கு போய் ஆடுறாரு?..' - TNPL ஆடுவது குறித்து உணர்வுபூர்வமாக பேசிய அஸ்வின்!

Rishan Vengai

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வழிநடத்தும் ரவிச்சந்திரன் அஸ்வின், தன்னுடைய பேட்டிங் மற்றும் கேப்டன்சி இரண்டிலும் அபாரமாக செயல்பட்டு திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச்சென்றுள்ளார்.

இதுவரை 8 சீசன்களை கடந்துள்ள டிஎன்பிஎல்லில் ஒருமுறைகூட திண்டுக்கல் டிராகன்ஸ் கோப்பையை வென்றதில்லை. இரண்டுமுறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையிலும் தோல்வியையே கண்டுள்ளது.

ashwin

இந்நிலையில் 2024 டிஎன்பிஎல் தொடரின் எலிமினேட்டர் மற்றும் குவாலிஃபயர் 2 முதலிய இரண்டு போட்டிகளிலும் 57 ரன்கள் மற்றும் 69 ரன்கள் என மிரட்டிய அஸ்வின், ஒரு கேப்டனாக மட்டுமில்லாமல் ஒரு வீரராகவும் ஜொலித்து அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச்சென்றுள்ளார்.

சகவீரரிடம் கத்திய அஸ்வின்..

டிஎன்பிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டனான அஸ்வின், சகவீரரிடம் கத்தும் வீடியோ ஒன்று சமீபத்தில் சமூகவலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவில் ‘ரன்சேஸிங்கின் போது பேட்டிங் செய்துமுடித்துவிட்டு பெவிலியனினில் அமர்ந்திருந்த அஸ்வின், முக்கியமான தருணத்தில் சகவீரர் கேட்ச் கொடுக்கும் விதத்தில் தூக்கியடித்து விளையாடியதால், ஒழுங்கா விளையாடு என கோவத்தில் திட்டிய நிகழ்வு’ இணையத்தில் வைரலாகியது.

அந்த வீடியோவை பார்த்த சிலர், ஒரு இளம்வீரரின் வாய்ப்பை பறித்தது இல்லாமல், சின்னபசங்களிடம் மோசமாக நடந்துகொள்கிறார் எனவும், சிறுவர்களிடம் மோதி தன்னை பெரியவர் என்று நிரூபித்துக்கொள்கிறார் எனவும் விமர்சனங்களை வைத்தனர்.

டிஎன்பிஎல் ஆடுவது என் கடமை.. உணர்வுபூர்வமாக பேசிய அஸ்வின்!

இந்நிலையில் டிஎன்பிஎல்லில் ஆடுவது குறித்தும் இளம் வீரர்களை கேப்டனாக வழிநடத்துவது குறித்தும் பேசியிருக்கும் அஸ்வின், தமிழ்நாடு கிரிக்கெட் எனக்கு நிறைய செய்துள்ளது, அதற்கு நான் ஏதாவது செய்யவேண்டும் என நினைக்கிறேன், நான் பார்த்த உலககிரிக்கெட்டின் சில நுணுக்கமான விசயங்களை தமிழ்நாட்டின் இளம்வீரர்கள் கற்றுக்கொண்டு முன்னேறினால் அதைவிட பெரிய விசயம் எனக்கு வேறுஎதுவும் இருக்காது என உணர்வுபூர்வமாக பேசினார்.

டிஎன்பிஎல் பதிவிட்டிருக்கும் வீடியோவில் பேசியிருக்கும் அஸ்வின், “டிஎன்பிஎல்லில் ஆடுவதே என்னுடைய கடமையாக பார்க்கிறேன். ஏனென்றால் இங்கிருக்கும் தமிழ்நாட்டின் இளம்வீரர்கள் தான் பின்னாளில் பெரிய விருட்சமாக வளரப்போகிறார்கள். இவர்களுக்கு உலககிரிக்கெட்டில் நான் கற்றுக்கொண்ட சின்ன சின்ன நுணுக்கங்களை பகிர்ந்துகொள்வது என்னுடைய கடமை என நினைக்கிறேன்.

இதற்குமுன்னர் இருந்ததுபோல் இப்போது இருக்கும் இளம்வீரர்கள் சீனியர்களிடமிருந்து கற்றுக்கொள்வது குறைந்துள்ளது, முன்னர் பத்ரிநாத் ஜூனியர்களுக்கு கொட்டிகூட சொல்லி கொடுப்பார், அப்படித்தான் பாலாஜி முதலிய மற்ற தமிழ்நாடு சீனியர் வீரர்களும் ஜூனியர்களுக்கு தங்களுடைய அனுபவத்தை கற்றுக்கொடுத்தனர். ஆனால் இப்போது எல்லாம் மாறிவிட்டதாக உணர்கிறேன். அதனால் என்னிடமிருக்கும் விசயங்களை இளம்வீரர்களிடம் பகிர்ந்து கொள்ளும் இடமாகவே டிஎன்பிஎல்லை பார்க்கிறேன். அவர்கள் என்னிடமிருந்து சிலவற்றை கற்றுக்கொண்டு முன்னேறினால் அதைவிட பெரிய விசயம் வேறெதுவும் இல்லை. இந்த தமிழ்நாடு கிரிக்கெட் எனக்கு நிறைய கொடுத்துள்ளது, இதில் பங்குபெற்று விளையாடுவது என்னுடைய கடமையாக நினைக்கிறேன்” என்று கூறினார்.