ashwin tnpl batting web
T20

TNPL: 230 ஸ்டிரைக்ரேட்.. 11 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்.. அஸ்வின் அதிரடியால் பைனல் சென்ற திண்டுக்கல்!

எலிமினேட்டர் மற்றும் குவாலிஃபயர் போட்டிகளில் அடுத்தடுத்து இரண்டு அரைசதங்களை விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் கேப்டனாக திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச்சென்றுள்ளார்.

Rishan Vengai

2024 தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரானது ஜூலை 5ம் தேதிமுதல் தொடங்கி நடைபெற்றுவந்த நிலையில், தற்போது இறுதிப்போட்டியை எட்டியுள்ளது. 28 லீக் போட்டிகள் முடிவுற்ற நிலையில், லைக்கா கோவை கிங்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் முதலிய 8 அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தின.

தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட லைக்கா கோவை கிங்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் முதலிய 4 அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்தன.

TNPL 2024

ஐபிஎல் தொடரை போன்றே முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் குவாலிஃபயர் 1 போட்டியிலும், கடைசி இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் போட்டியிலும் பங்கேற்று, குவாலிஃபயர் 1-ல் தோற்கும் அணியும் எலிமினேட்டரில் வெற்றிபெறும் அணியும் குவாலிஃபயர் 2 போட்டியில் மோதுவார்கள். வெற்றிபெறும் அணிகள் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.

குவாலிஃபயர் 1 முடிவு:

lyca kovai kings

அந்தவகையில் குவாலிஃபயர் 1-ல் லைக்கா கோவை கிங்ஸ் மற்றும் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் மோதிய நிலையில், திருப்பூர் அணி நிர்ணயித்த 201 ரன்கள் இலக்கை 18.5 ஓவரிலேயே எட்டிய கோவை கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தகுதிபெற்றது.

எலிமினேட்டர் முடிவு:

கடைசி இரண்டு இடங்கள் பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகளுக்கு இடையே எலிமினேட்டர் போட்டி நடைபெற்றது. அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, அபரஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை எதிர்கொண்டு விளையாடியது.

ashwin

முதலில் ஆடிய சேப்பாக் அணி 158 ரன்கள் அடித்த நிலையில், இரண்டாவது பேட்டிங் செய்த திண்டுக்கல் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் 35 பந்துகளில் 4 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் உட்பட 162 ஸ்டிரைக்ரேட்டில் 57 ரன்கள் அடித்து வலுவான தொடக்கத்தை கொடுத்து அணியை முன்னின்று வழிநடத்தினார். இறுதிஓவர்வரை சென்ற எலிமினேட்டர் போட்டியில் 19.5 ஓவரில் இலக்கை எட்டி குவாலிஃபயர் 1-க்கு தகுதிபெற்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி.

ருத்ரதாண்டவம் ஆடிய அஸ்வின்.. பைனலுக்கு முன்னேறிய திண்டுக்கல்..

ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகளுக்கு இடையே விறுவிறுப்பாக தொடங்கிய குவாலிஃபயர் 2 போட்டியில், அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய திண்டுக்கல் பவுலர்கள் திருப்பூர் அணியை 108 ரன்களில் ஆல்அவுட் செய்து சுருட்டி எறிந்தனர். சிறப்பாக பந்துவீசிய விக்னேஷ் 3 விக்கெட்டுகளும், வருண் சக்கரவர்த்தி, சுபோத் பதி இருவரும் தலா 2 விக்கெட்டுகளும், அஸ்வின் மற்றும் சந்தீப் வாரியர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினர்.

Dindigul Dragons

109 ரன்கள் என்ற சுலபமான இலக்கை துரத்தினாலும், தொடக்க வீரராக களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டிங்கில் ருத்ரதாண்டவம் ஆடினார். 30 பந்துகளில் 11 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டிய அஸ்வின் 230 ஸ்டிரைக்ரேட்டில் 69 ரன்களை குவித்தார். அஸ்வின் அதிரடியால் 10.5 ஓவரிலேயே இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது திண்டுக்கல் டிராகன்ஸ் அணி. அடுத்தடுத்த 2 நாக் அவுட் போட்டிகளில் அரைசதமடித்து தொடக்க வீரராக தனி சகாப்தத்தையே நிகழ்த்திவருகிறார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

Ravi Ashwin

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டி லைக்கா கோவை கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகளுக்கு இடையே நாளை சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறவிருக்கிறது.