நடப்பு ஐபிஎல் தொடரில், நேற்று (மே 17) லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிடம், 18 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தோல்வியடைந்ததால், புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்த அந்த அணி, மோசமாக இந்த சீசனை நிறைவுசெய்துள்ளது.
இந்த நிலையில், லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்காததால், மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒரு போட்டியில் விளையாட ஐபிஎல் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் மும்பை அணி ஏற்கெனவே பிளேஆப் சுற்றை இழந்துவிட்டதால், ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு நேற்றைய போட்டியில் வாய்ப்பளிக்கப்பட்டது.
போட்டியின் 2-வது ஓவரை அர்ஜுன் டெண்டுல்கரே வீசினார். இந்த ஓவரில், 2-வது பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஸ்டோய்னிஸிற்கு அவுட் கொடுக்கப்பட்டது. ஆனால், அவர் ரிவ்யூ எடுக்கவே, பந்து ஸ்டெம்பிற்கு மேல் சென்றது தெளிவாக தெரிந்தது. இதன் காரணமாக நடுவர் முடிவு திரும்பப் பெறப்பட்டது.
ஆயினும், இந்த ஓவரின் கடைசிப் பந்தில் ரன் எடுக்காதபோதிலும், அவர் கிரீஸிற்குள்ளேயே நின்று கொண்டிருந்தார். அப்போது அர்ஜுன் டெண்டுல்கர் தேவையின்றி மார்கஸ் ஸ்டோய்னிஸ் மேல் பந்தை எறிவதுபோல் மிகுந்த கோபத்துடன் ரியாக்சன் கொடுத்தார். அதனால் ஆச்சரியமடைந்த ஸ்டோய்னிஸும் ஏதோ அவரிடம் கேட்பதுபோல் ரியாக்ஷன் கொடுத்தார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதுடன் இதற்குப் பலரும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், அதேபோட்டியில் 15-வது ஓவரை அர்ஜுன் டெண்டுல்கர் வீசினார். அவர் வீசிய முதல் இரண்டு பந்துகளையும் நிக்கோலஸ் பூரன் சிக்ஸர்களாகப் பறக்கவிட்டார். அப்போது, அர்ஜுன் டெண்டுல்கர் தசை பிடிப்பால் மைதானத்தைவிட்டு வெளியேறினார். ஆனால், அர்ஜுன் டெண்டுல்கர் பயந்துபோய் வெளியேறிவிட்டதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.