Anrich Nortje pt desk
T20

“சிறப்பாக செயல்படுவதற்குத் தேவையானதை கண்டறிவதுதான் முக்கியம்” - கம்பேக் குறித்து ஆன்ரிக் நார்கியா

Viyan

ஆன்ரிக் நார்கியா - நடந்துவரும் டி20 உலகக் கோப்பையில் அசத்தலாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். இதுவரை 5 போட்டிகளில் விளையாடியிருக்கும் அவர், 10 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். அதுவும் 5.35 என்ற அட்டகாசமான எகானமியில். ஒவ்வொரு 12 பந்துகளுக்கும் 1 விக்கெட் வீழ்த்திக்கொண்டிருக்கும் அவர், இந்தத் தொடருக்கு முன்னால் மிகமோசமான ஃபார்மில் இருந்தார்.

ஐபிஎல் தொடரில் ஒருகட்டத்துக்கு மேல் அவரை ஓரம்கட்டியது டெல்லி கேபிடல்ஸ். அதனால் இவர் உலகக் கோப்பையில் சோபிப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அதையெல்லாம் பொய்யாக்கும் விதத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் நார்கியா.

Anrich Nortje

கடும் காயத்திலிருந்து மீண்டு வந்த அவர், தான் தன் கம்பேக்கை திட்டமிட்டதைப் பற்றிப் பேசியிருக்கிறார். "என் செயல்பாடுகள் சிறப்பாக இல்லாவிட்டாலும், நான் சிறப்பாக செயல்படுவதற்குத் தேவையானதை கண்டறிவதுதான் முக்கியமானதாக இருந்தது. போட்டிகளுக்குப் பிறகான பயிற்சிகள் பெரிதாக உதவின. டெல்லியில் பயிற்சியாளர்களுடன், குறிப்பாக பௌலிங் பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹோப் உடன் பணியாற்றியது நல்ல அனுபவம். அந்தக் காலகட்டத்தில் ஸ்கோர் போர்ட் என்ன சொன்னது என்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை.

என்னுடைய அந்த ஃபார்ம் நிச்சயம் எல்லோருக்கும் பிரச்னையாக இருந்திருக்கும். ஆனால் அதன்பிறகு கிடைத்த பிரேக் பெரிதாக உதவியது. மீண்டும் திரும்ப வரும்போது நாம் எவ்வளவு தீவிரமாக வருகிறோம் என்பது தான் முக்கியம். என்னுடைய எலும்பு முறிவுக்குப் பிறகு எங்களுடைய மருத்துவர் குழு என்னை மிகவும் சிறப்பாகப் பார்த்துக்கொண்டார்கள். அதன்பிறகு தென்னாப்பிரிக்காவில் சில போட்டிகள் விளையாடினேன். நான் விளையாடலாம் என்று சொன்ன பிறகு எவ்வளவு வேகமாக, எவ்வளவு தீவிரமாக விளையாடமுடியுமோ அவ்வளவு வேகமாக தீவிரமாக முழு உத்வேகத்துடன் களமிறங்கனேன்.

SA

அது என்னுடைய முடிவுதான். என்னுடைய உடல் எப்படி ஒத்துழைக்கிறது என்று பார்ப்பது முக்கியம் என்று நினைத்தேன். Stress Fracture எனக்கு 2010 முதலே இருந்தது. முதுகில் சில பிரச்னைகளும் இருக்கவே செய்தன. அதனால் என்னால் எப்போது முடியுமோ அப்போதே விளையாடிட வேண்டும் என்று நினைத்தேன். நான் எப்போது தயார் என்று எனக்குத் தோன்றுகிறதோ அப்போது விளையாட வேண்டும் என்று நினைத்தேன்.

ஒவ்வொரு தொடரிலும் விளையாடுவது சரியாக இருக்காது என்று எனக்குத் தோன்றியது. அதனால் என் உடலுக்கு ஏற்ற முடிவை நானாக எடுத்தது சரியாகவே அமைந்திருக்கிறது. அந்த முடிவு எனக்குத் திருப்தியளித்திருக்கிறது. அதனால் என்னைப் பொறுத்தவரை நிதானமாக இருப்பதிலும், தேவைப்படும்போது ஒரு வாரத்துக்கோ, ஒரு மாதத்துக்கோ பிரேக் தேவை என்றால், அதை என்னால் எடுக்க முடியும் என்று நம்புவதும் முக்கியம் என்று உணர்ந்திருக்கிறேன்" என்று கூறினார் நார்கியா.

இப்போது அவர் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். 4 ஓவர்கள் மட்டும் வீசும் டி20 கிரிக்கெட்டுக்கு அவர் உடல் ஒத்துழைக்கிறது. ஆனால் கூடிய விரைவில் வரும் சாம்பியன்ஸ் டிராபி போன்ற ஒருநாள் போட்டிகளில் அவரால் முழுமையான ஃபிட்னஸோடு ஆட முடியுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, "ஆனால் இப்போதைக்கு என் முன்னால் இருக்கும் ஒரு பெரிய கேள்வி ஒருநாள் போட்டிகளுக்கு என் உடல் எப்படி ஒத்துழைக்கும் என்பதில்தான். அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் வேறு நடக்கிறது. அதை எப்படி அணுகப்போகிறேன் என்பதுதான் மிகப் பெரிய கேள்விக்குறி. இதுவரை எல்லாம் சரியாகவே சென்றுகொண்டிருக்கிறது.

SA

ஆனால் இதுவரை நான் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சங்கத்திடம் பேசவேண்டியது நிறைய இருக்கிறது. இன்னும் அவர்களிடம் இது தொடர்பாக நான் பேசவில்லை. அடுத்த சில மாதங்களுக்கு ஒருநாள் போட்டிகளில் என்ன செய்யப்போகிறேன் என்பது பற்றி இன்னும் நான் முடிவு எடுக்கவில்லை. அதனால் காலம் வரும்போது அதைப் பற்றி யோசிப்போம். இப்போதைக்கு நான் உலகக் கோப்பையில்தான் முழு கவனத்தையும் செலுத்துகிறேன். அந்தக் கோப்பையை நாங்கள் எங்கள் நாட்டுக்கு எடுத்துச் செல்லவேண்டும்" என்று கூறியிருக்கிறார் நார்கியா.

நார்கியா மட்டுமல்ல, இந்த உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்க அணியுமே கலக்கிக்கொண்டிருக்கிறது. இதுவரை விளையாடியிருக்கும் 5 போட்டிகளிலுமே வெற்றி பெற்றிருக்கிறது அந்த அணி. சூப்பர் 8 சுற்றையும் வெற்றியோடு தொடங்கியிருக்கும் அந்த அணி, அமெரிக்க கண்டிஷன்களில் நன்றாக ஆடியதுபோல் வெஸ்ட் இண்டீஸிலும் நன்றாகவே தொடங்கியிருக்கிறது.

இதுபற்றிப் பேசிய நார்கியா, உலகக் கோப்பை வெல்வதே தங்கள் லட்சியம் என்று கூறியிருக்கிறார். "இதுவரை ஆடிய ஆடுகளங்களில் விக்கெட் எடுப்பதற்கு தொடர்ந்து முயற்சி செய்து நல்ல பந்துக்கு செட் செய்யவேண்டிய தேவை இருந்தது. கடந்த சில வாரங்களாகவே அப்படித்தான் இருந்தது. அவை எல்லாமுமே லோ ஸ்கோரிங் போட்டிகள் தான். இருந்தாலும் பந்தை சரியான இடங்களில் பிட்ச் செய்யவேண்டியது அவசியமாக இருந்தது.

Anrich Nortje

அந்த நாளில் என்ன தேவையோ அதை செய்வது தான் முக்கியம். நியூ யார்க் நகரில் 3 போட்டிகளில் ஆடினோம். அதனால் அந்தப் போட்டிகளில் எல்லாமே கிட்டத்தட்ட 'காபி' & 'பேஸ்ட்' தான். ஆனால் இப்போது எல்லாமே மாறுகிறது. ஆடுகளங்களும், சூழ்நிலையும் தொடர்ந்து மாறும்போது சரியான லென்த் இதுவா அதுவா என்று கண்டறித்து செயல்படுத்துவது மிகவும் முக்கியம்.

இது உலகக் கோப்பை என்றும், இது மிகப் பெரிய அரங்கம் என்றும் எங்களுக்குத் தெரியும். அதை யாருமே குறைத்து மதிப்பிடுகிறார்கள் என்று நான் சொல்லமாட்டேன். ஒவ்வொரு போட்டியுமே மிகப் பெரிய போட்டி. நீங்கள் உங்கள் அடுத்த போட்டியை நினைத்துக் கவலைப்படத் தொடங்கிவிட்டால், கவனச் சிதறல் ஏற்படும். இத்தொடரை நாங்கள் வெல்லவேண்டும் என்று நினைக்கிறோம். மிகவும் கவனமாக, சரியான முறையில் தயாராகியிருக்கிறோம்" என்று கூறினார் நார்கியா.