pakistan cricinfo
T20

”நான் பாகிஸ்தானை அவமதிக்கவில்லை.. ஆனால் கனடாவிற்கு எதிராக படுதோல்வி அடைவார்கள்”! -முன்னாள் IND வீரர்

Rishan Vengai

2024 டி20 உலகக்கோப்பை தொடரானது பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு மறக்க வேண்டிய ஒரு தொடராக மாறியுள்ளது. தங்களுடைய முதல் லீக் போட்டியில் அமெரிக்காவை எதிர்கொண்ட அவர்கள், கையிலிருந்த போட்டியை கோட்டைவிட்டு சூப்பர் ஓவர் வரை சென்று தோற்றார்கள்.

Pak vs USA

அதற்குபிறகு இந்தியாவிற்கு எதிராக இரண்டாவது போட்டியில் விளையாடிய பாகிஸ்தான் அணி, தங்களுடைய அபாரமான பந்துவீச்சு மூலம் இந்தியாவை 119 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது. 120 ரன்கள் என்ற எளிதான டார்கெட்டை எப்படியும் பாகிஸ்தான் எளிதில் எட்டிவிடும் என நினைத்தபோது, பேட்டிங்கில் சொதப்பிய பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவிற்கு எதிரான போட்டியை 6 ரன்கள் வித்தியாசத்தில் இழந்து பரிதாபமாக தோல்வியை தழுவினர்.

பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்ட போதும் வெற்றியை பெறமுடியவில்லையே என்ற எண்ணத்தில், வேகப்பந்துவீச்சாளர் நசீம் ஷா மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதார்.

IND vs PAK match

இந்நிலையில் பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுமா என்ற கேள்வி பெரியதாக எழுந்துள்ளது. மீதமிருக்கும் அயர்லாந்து மற்றும் கனடா அணிகளுக்கு எதிராக பெரிய வெற்றியை பெற்றால் மட்டுமே அவர்களுக்கான வாய்ப்புகள் உயிர்ப்புடன் இருக்கும். இல்லையேல் கடந்த இரண்டு உலகக்கோப்பையில் இறுதிப்போட்டிவரை முன்னேறிய அணி, இந்தமுறை லீக் சுற்றோடு வெளியேறும் நிலைக்கு செல்லும்.

பாகிஸ்தானை கனடா அணி எளிதில் வீழ்த்தும்..

மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்திவரும் பாகிஸ்தான் அணி, எந்த அணிக்கு எதிராக வேண்டுமானாலும் தோல்வியை பெறும் என இந்தியாவின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் சூப்பர் 8 வாய்ப்பு குறித்து பேசியிருக்கும் அம்பத்தி ராயுடு, “நான் பாகிஸ்தான் கிரிக்கெட்டை அவமதிக்கவில்லை. ஆனால் அடுத்தப் போட்டியில் பாகிஸ்தானை கனடா அணி எளிதாக வீழ்த்தும். தற்போது பாகிஸ்தான் விளையாடுவதை பார்த்தால், எந்த அணியும் அவர்களை எளிதாக வீழ்த்த முடியும். அவர்களால் இந்தியாவுக்கு எதிராக 120 ரன்களை சேஸ் செய்ய முடியவில்லை, அமெரிக்காவிற்கு எதிராகவும் அவர்களின் பேட்டர்கள் எதுவும் செய்யவில்லை. அவர்களது பந்துவீச்சாளர்களால் 159 ரன்களை பாதுகாக்க முடியவில்லை” என்று பாகிஸ்தான் நிலைமையை எடுத்து கூறினார்.

bumrah

மேலும் “உலகக் கோப்பையில் பாகிஸ்தான் வெற்றி பெறுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால் அவர்களின் வீரர்களுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லை. அவர்கள் பேட்டிங்கில் மிகக் குறைவான தெளிவைக் கொண்டிருக்கிறார்கள், அதிரடியாக விளையாடவேண்டுமா, நிலைத்து ஆடவேண்டுமா என்ற தெளிவு இல்லை. அவர்கள் களத்தில் பவுண்டரிகள், சிக்சர்கள் மற்றும் சிங்கிள்கள் என அனைத்தையும் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களால் நிதானமாக நின்று செயல்படுத்த முடியவில்லை” என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உடன் தெரிவித்துள்ளார்.