ajit agarkar - virat kohli web
T20

டி20 உலகக்கோப்பை அணியில் விராட் கோலி இருப்பாரா? அஜித் அகர்கர் மறைமுக பதில்!

ஏப்ரல் கடைசி வாரத்தில் உலகக்கோப்பைக்கான இந்திய அணி தேர்வுசெய்யப்படவிருக்கும் நிலையில், அஜித் அகர்கரின் கருத்து கோலியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது.

Rishan Vengai

2024 ஐபிஎல் தொடரானது மே 26ம் தேதி முடிவடையும் நிலையில், 2024 டி20 உலகக்கோப்பையானது ஜூன் 2ம் தேதி தொடங்கவிருக்கிறது. இதற்கான இந்திய அணி வரும் ஏப்ரல் இறுதிவாரம் அல்லது மே முதல்வாரம் தேர்ந்தெடுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நடப்பு ஐபில் தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்கள், டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவார்கள் என்பதால், இளம்வீரர்கள் தங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திவருகின்றனர். ஆனால் அதேநேரத்தில் விராட் கோலிக்கான இடம் உலகக்கோப்பையில் இல்லை என்றும், ஒருவேளை அவருடைய பெயர் சேர்க்கப்படவேண்டும் என்றால் நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் சிறப்பாக செயல்படவேண்டும் என்ற கருத்துகள் அதிகமாக பேசப்பட்டு வருகின்றன.

virat kohli

இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் விராட் கோலியின் இடம் குறித்து விவாதித்து வருவதாக தகவல் வெளியான நிலையில், அணிக்கு தேவையென்றால் கோலியை கூட நீக்குங்கள் என தெரிவித்து முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றினார்.

இந்நிலையில் தற்போது விராட் கோலி குறித்து பேசியிருக்கும் அஜித் அகர்கர், விராட் கோலியின் இருப்பை உறுதிசெய்யும் வகையில் பேசியுள்ளார்.

கோலி ஃபிட்டாக இருக்கும்போது.. அவரை தடுக்கவே முடியாது!

விராட் கோலி குறித்து SportifywithPRG போட்காஸ்ட்டில் பேசியிருக்கும் அஜித் அகர்கர், “விராட் கோலியை பாருங்கள், கிரிக்கெட்டில் ஒரு அளவுகோலை அமைத்தவர்களில் அவரும் ஒருவர். அவருடைய 10-15 வருட கிரிக்கெட் வாழ்க்கையில், அவர் எப்போதும் சிறந்த உடற்தகுதியை பெற்றுள்ளார். அப்போதெல்லாம் களத்தில் முடிவுகள் எப்படியிருந்தது என்பதை நீங்கள் பார்க்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

virat kohli

மேலும், “விராட் கோலி போன்ற ஒருவர் முன்னுதாரணமாக இருந்தால், உங்களுக்கு களத்தில் பல சாதகமான முடிவுகள் வரும். அணிக்குள் உடற்தகுதி என்பது அதிகப்படியான முக்கியத்துவம் பெற்றதில் விராட் கோலியின் பங்கு முக்கியமானது” என்று பேசியுள்ளார். விரைவில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ஓப்பன் செய்வார்கள் என்ற எதிர்ப்பார்ப்புடன் ரசிகர்கள் இருந்துவருகின்றனர்.