rohit - rinku x
T20

“ரிங்கு சிங் எந்த தவறும் செய்யவில்லை; அது எங்களுக்கே கடினமான முடிவு” - அஜித் அகர்கர் வருத்தம்

Rishan Vengai

பரபரப்பாக நடந்துவரும் 2024 ஐபிஎல் தொடர் வரும் மே 26-ம் தேதி முடிவடையும் நிலையில், 2024 டி20 உலகக்கோப்பை தொடரானது ஜூன் 2-ம் தேதி முதல் நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில், டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் கடந்த இந்திய டி20 கிரிக்கெட் அணியில் இடம்பெறாத “”ரிஷப் பண்ட், ஷிவம் துபே, சஞ்சு சாம்சன், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் பட்டேல்” முதலிய வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. ஆனால் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டு பிரதான பினிசராக இருந்த ரிங்கு சிங்கின் பெயர், இந்திய அணியின் 15 வீரர்கள் பட்டியலில் இல்லாமல் போனது எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Rinku Singh

ரிங்கு சிங் இல்லாதது குறித்து பல முன்னாள் வீரர்கள் அதிருப்தி தெரிவித்துவரும் நிலையில், அவருடைய நீக்கம் குறித்த ரிங்கு சிங் தந்தை “இந்திய அணியில் இல்லாததால் ரிங்கு சிங் மிகவும் மனம் உடைந்துவிட்டார். எங்களுக்கு எப்படியும் அவர் உலகக்கோப்பைக்கான 11 வீரர்கள் கொண்ட அணியில் இருப்பார் என்ற நம்பிக்கை இருந்தது. அதனால்தான் தற்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. ரிங்கு சிங் உலகக்கோப்பை அணியில் இருக்கப்போகிறார் என்பதை கொண்டாட இனிப்புகள், பட்டாசுகள் எல்லாம் வாங்கி தயாராக இருந்தோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை” என்று வேதனையுடன் கூறினார்.

ரிங்கு சிங் இடம்பெறாமல் போனது கடினமான முடிவு! - அஜித் அகர்கர்

ரிங்கு சிங்கின் நீக்கம் குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அஜித் அகர்கர், “ரிங்கு சிங்கை எடுக்கமுடியாமல் போனது எங்களுக்கே மிகவும் கடினமான ஒரு முடிவாக இருந்தது. உண்மையில் ரிங்கு சிங் எந்ததவறும் செய்யவில்லை. அவர் எங்களின் ரிசர்வ் வீரராக இருக்கிறார், அதிலிருந்தே நீங்கள் தெரிந்துகொள்ளலாம் ரிங்குசிங் தேர்வு செய்யப்படமுடியாமல் போனது எவ்வளவு சிரமமானதாக இருந்திருக்கும் என்று. எங்களுக்கு கூடுதலாக பந்துவீச்சு இருப்பது தேவை என்று உணர்ந்ததால் இந்த முடிவை எடுத்தோம்” என்று கூறினார்.

Rinku Singh

15 வீரர்களை தான் எடுக்க முடியும் என்று வருத்தம் தெரிவித்த அவர், “எங்களுக்கு இன்னும் டி20 உலகக்கோப்பை ஆடுகளத்தின் நிலைமைகள் பற்றி அதிகம் தெரியாது. அதனால் நாங்கள் பந்துவீச்சாளர்களின் வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளோம். உண்மையில் ரிங்கு சிங் இடம்பெறாதது கடினமானது, ஆனால் எங்களால் அணியில் 15 பேரை மட்டுமே எடுக்க முடியும். ஆனால் அவர் எப்போதும் எங்களுடைய பார்வையில் இருந்தார்” என்று அகர்கர் மேலும் கூறினார்.