ஆப்கானிஸ்தான் அணியைப் பொறுத்தவரை அவர்களின் பந்துவீச்சு தான் அவர்களுக்கு மிகப் பெரிய பலம். வேகப்பந்துவீச்சு, ஸ்பின் என இரண்டு யூனிட்டுமே சிறப்பாக இருக்கிறது. கேப்டன் ரஷீத் கான் (லெக் ஸ்பின்), முஜீப் உர் ரஹ்மான் (ஆஃப் ஸ்பின்), நூர் அஹமது (சைனாமேன்) என அனைத்து விதமான ஸ்பின்னர்களும் அந்த அணியில் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே உலகத்தர பௌலர்களாகவும் இருக்கிறார்கள். இவர்களால் மிடில் ஓவர்களில் மட்டுமல்ல, பவர்பிளே (முஜீப்), டெத் (ரஷீத்) ஓவர்களிலும் இவர்களால் பந்துவீச முடியும் என்பது கூடுதல் பலம். போக, அனுபவ ஆல்ரவுண்டர் முகமது நபியும் இருக்கிறார்!
வேகப்பந்துவீச்சாளர்கள் ஸ்பின்னர்கள் போல் உலகத்தரத்தில் இல்லாவிட்டாலும், அவர்களும் எந்த அணிக்கும் சவால் கொடுக்கக் கூடியவர்களே. நவீன் உல் ஹக் (லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ்), ஃபசல்ஹக் ஃபரூக்கி (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்), குபதின் நைப் (டெல்லி கேபிடல்ஸ்), அஸ்மதுல்லா ஓமர்சாய் (குஜராத் டைட்டன்ஸ்) என அனைவரும் ஐபிஎல் அணிகளில் ஆடும் அளவுக்கு திறமை வாய்ந்தவர்களே. பவர்பிளேவிலும், மிடில் ஓவர்களிலும் இவர்களால் நல்ல தாக்கம் ஏற்படுத்த முடியும். டெத் ஓவர்களில் நவீனுக்கு நல்ல கூட்டணி அமைந்தால், அந்த ஏரியாவிலும் அவர்களால் கன்ட்ரோலில் இருக்க முடியும்.
இப்படி ஒட்டுமொத்தமாகவே ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு மிகவும் தாக்கம் ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது. நிச்சயம் பெரிய அணிகளுக்குக் கூட அவர்களால் சவால் கொடுக்க முடியும். உகாண்டா அணி இந்த பந்துவீச்சை சமாளிப்பது சாதாரணமாக இருக்காது.
அவர்களின் பந்துவீச்சு அளவுக்கு அச்சுறுத்துவதாக இல்லை என்றாலும், பேட்டிங் சமீபத்தில் முன்னேற்றம் கண்டிருக்கிறது. ரஹ்மானுல்லா குர்பாஸ் ஐபிஎல் சாம்பியனாக மகுடம் சூடி வந்திருக்கிறார். அவரால் மிகவும் அதிரடியான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.
குல்பதின் நைப், ஓமர்சாய் ஆகியோரும் அதிரடியாக ரன் சேர்க்கக்கூடியவர்கள். அனுபவ பேட்ஸ்மேன்கள் நபி, நஜிபுல்லா ஜத்ரான் ஆகியோர் இருப்பது மிடில் ஆர்டரையும் பலப்படுத்துகிறது. ரஷீத் கான், கரீம் ஜனத் ஆகியோராலும் பேட்டிங்கில் நல்ல பங்களிப்பைக் கொடுக்க முடியும் என்பது கூடுதல் சாதகம்! அதனால், இனியும் ஆப்கானிஸ்தானை ஒரு கத்துக்குட்டி அணியாகக் கருத முடியாது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எப்படி சுழற்பந்துவீச்சு பலமோ, உகாண்டா அணிக்கும் சுழற்பந்து வீச்சு பலம் தான். அந்த அணியில் 3 இடது கை ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். வலது கை பேட்ஸ்மேன்கள் நிறைந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு அவர்கள் நிச்சயம் சவாலாக இருப்பார்கள்.
அதுமட்டுமல்லாமல் அவர்களின் மிடில் ஆர்டரில் இருக்கும் 3 ஆல்ரவுண்டர்கள் (ரியாசத் அலி ஷா, தினேஷ் நக்ரானி, அல்பேஷ் ரம்ஜானி) அந்த அணிக்கு மிகப் பெரிய பலமாக இருப்பார்கள். இவர்களின் அசத்தலான செயல்பாடு தான் அந்த அணி உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் ஜிம்பாப்வேவை வீழ்த்தவும், இந்தத் தொடருக்குத் தகுதி பெறவும் காரணமாக அமைந்தது.
ஆப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் ஜத்ரான், குல்பதின் நைப், அஸ்மதுல்லா ஓமர்சாய், முகமது நபி, நஜிபுல்லா ஜத்ரான், ரஷீத் கான் (கேப்டன்), நூர் அஹமது, முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், ஃபசல்ஹக் ஃபரூக்கி.
உகாண்டா: ரோஜர் முகாசா, சைமன் செசாய், ராபின்சன் ஒபுயா, ரியாசத் அலி ஷா, தினேஷ் நக்ரானி, அல்பேஜ் ரம்ஜானி, கென்னத் வைஸ்வா, ஃப்ரெட் அசெலாம் (விக்கெட் கீப்பர்), பிலால் ஹசன், பிரயன் மசாபா (கேப்டன்), ஹென்றி சென்யோண்டோ.
ஆப்கானிஸ்தான் - ரஹ்மானுல்லா குர்பாஸ்: ஆப்கானிஸ்தான் அணிக்கு இவர் கொடுக்கும் தொடக்கம் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றில் அசத்தலாக ஆடி நல்ல ஃபார்மில் வந்திருக்கிறார். இந்த உலகக் கோப்பையில் இவரது ஃபார்ம் அந்த அணிக்கு மிகவும் முக்கியம்.
உகாண்டா - ரியாசத் அலி ஷா: மிடில் ஆர்டரில் சிறப்பாக ஆடி தாக்கம் ஏற்படுத்தக் கூடிய இவர், சமீபத்தில் மிகச் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். பவர்பிளேவில் தன் பந்துவீச்சின் மூலமும் அணிக்கு தாக்கம் ஏற்படுத்திக் கொடுக்கக் கூடியவர்.
கணிப்பு: ஆப்கானிஸ்தான் அணிக்கு ஒரு எளிதான வெற்றி கிடைக்க வாய்ப்பு அதிகம்