afg vs png pt web
T20

அசாத்திய ஆட்டத்தின் மூலம் சூப்பர் 8ல் ஆஃப்கானிஸ்தான்.. குரூப் சுற்றிலேயே வெளியேறும் நியூசிலாந்து!

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.

Angeshwar G

afg vs png

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒவ்வொரு அணியும் 4 பிரிவுகளின் கீழ் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், சூப்பர் 8 சுற்றுகள் ஜூன் 19 ஆம் தேதி முதல் தொடங்க இருக்கின்றன. இதில், குரூப் C பிரிவில் ஆஃப்கானிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து, உகாண்டா, பப்புவா நியூ கினியா போன்ற அணிகள் இடம்பெற்றன. இதில் மேற்கிந்திய தீவுகள் அணி சூப்பர் 8 சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்ற நிலையில், தற்போது ஆஃப்கானிஸ்தான் அணியும் தகுதி பெற்றுள்ளது.

டிரினிடாட்டில் இன்று நடைபெற்ற போட்டியில் பப்புவா நியூ கினி அணியை ஆஃப்கானிஸ்தான் சந்தித்தது. முதலில் பேட் செய்த பப்புவா நியூ கினி அணி 95 ரன்களுக்கு சுருண்டது. சிறப்பாக பந்துவீசிய ஆஃப்கானிஸ்தான் அணியில் ஃபரூக் 3 விக்கெட்களையும், நவீன் உல்ஹக் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதில், நவீன் உல் ஹக் 2.5 ஓவர்களை வீசி 4 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார். இதன்மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஆஃப்கானிஸ்தான் அணிக்காக 50 அல்லது அதற்கும்மேல் விக்கெட்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் அவரும் இணைந்தார்.

குரூப் Cயில் ஆப்கன் முதலிடம்

96 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய ஆஃப்கானிஸ்தான் 15.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை தொட்டது. ஆஃப்கானிஸ்தானில் விக்கெட்கள் விழுந்தாலும், குல்பாதின் நைப் சிறப்பாக ஆடி அணிக்கு வெற்றியை உறுதி செய்தார். ஆட்டநாயகனாக 3 விக்கெட்களை வீழ்த்திய ஃபரூக் தேர்வு செய்யப்பட்டார்.

இதன் மூலம் சி பிரிவில் ஆஃப்கானிஸ்தான் 6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. இப்பிரிவில் வெஸ்ட் இண்டீசும் சூப்பர் 8க்கு 6 புள்ளிகளுடன் தகுதி பெற்றிருந்தாலும் ரன் ரேட்டில் ஆஃப்கானிஸ்தானை விட பின் தங்கி 2ஆம் இடத்தையே பிடித்துள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணி ரன்ரேட்டில் +2.59 என்ற அளவில் இருந்தால், ஆஃப்கானிஸ்தான் அணி +4.23 என்ற அளவில் முதலிடத்தில் உள்ளது.

வெளியேறியது நியூசி!

ஆஸ்திரேலியா, தென்னாப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் ஏற்கனவே சூப்பர் 8க்கு தகுதிபெற்றுள்ளன. இதைத்தாண்டி குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவெனில், நியூசிலாந்து அணி குரூப் ஸ்டேஜிலேயே வெளியேறியுள்ளது.

2015ல் இருந்து 2023 ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் நடந்த 6 உலகக்கோப்பைத் தொடர்களிலும் நியூசிலாந்து அணி அரையிறுதி வரை முன்னேறியுள்ளது. 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு குரூப் சுற்றிலேயே வெளியேறுவது இதுதான் முதன்முறை.