ind a vs afg a web
T20

‘முடிச்சு விட்டாய்ங்க போங்க..’ அரையிறுதியில் IND A அணியை வீழ்த்தி FINAL சென்றது ஆப்கானிஸ்தான் ஏ அணி!

2024 வளர்ந்துவரும் வீரர்களுக்கான டி20 ஆசியக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஆப்கானிஸ்தான் அணி.

Rishan Vengai

2024 ஆடவர் வளர்ந்துவரும் வீரர்களுக்கான டி20 ஆசியக்கோப்பை தொடரானது, 18-ம் தேதி தொடங்கி அக்டோபர் 27-ம் தேதிவரை மொத்தம் 10 நாட்கள் நடைபெற்றுவருகிறது.

இதுவரை 50 ஓவர்கள் கொண்ட தொடராகவே நடத்தப்பட்ட நிலையில், நடப்பாண்டுக்கான வளர்ந்துவரும் வீரர்களுக்கான ஆசியக்கோப்பை தொடரானது டி20 போட்டிகள் கொண்ட தொடராக முதல்முறையாக நடத்தப்பட்டுள்ளது.

men's t20 emerging asia cup

இந்த தொடரில் 8 ஆசிய அணிகளான “இந்தியா ஏ, பாகிஸ்தான் ஏ, இலங்கை ஏ, வங்கதேசம் ஏ, ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஹாங்காங் மற்றும் ஆப்கானிஸ்தான்” முதலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் சிறப்பாக செயல்பட்ட “இந்தியா ஏ, பாகிஸ்தான் ஏ, இலங்கை ஏ, ஆப்கானிஸ்தான் ஏ” முதலிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன.

PAK A vs SL A

இந்நிலையில் அரையிறுதிப் போட்டிகள் இன்று ஓமனில் நடைபெற்றது. முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் ஏ அணியை வீழ்த்தி இலங்கை ஏ அணி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா ஏ மற்றும் ஆப்கானிஸ்தான் ஏ அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இந்தியாவை வீழ்த்தி பைனல் சென்ற ஆப்கானிஸ்தான்!

இரண்டாவது அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி எந்தவிதமான பிளானிங்கும் இல்லாமல் களத்திற்கு வந்ததுபோல் தெரிந்தது. ஆனால் இன்னைக்கு வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் பிளானுடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் விக்கெட்டையே விட்டுக்கொடுக்காமல் ரன் வேட்டை நடத்தினர்.

ராகுல் சாஹர் ஒரே ஓவரில் 4 சிக்சர்கள் உட்பட 31 ரன்களை விட்டுக்கொடுக்க, விக்கெட்டையே இழக்காமல் 14 ஓவர் முடிவில் 137 ரன்களை குவித்தது ஆப்கானிஸ்தான் அணி. பெரும் முயற்சிக்கு பிறகு 15வது ஓவரில் முதல் விக்கெட்டை இந்திய அணி எடுத்துவந்தது. அதற்கு பிறகும் அதிரடியை நிறுத்தாத ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 206 ரன்களை குவித்தது.

அதனைத்தொடர்ந்து விளையாடிய இந்திய அணி பெரிய பார்ட்னர்ஷிப்கள் போட முடியாமல் விக்கெட்டுகளை விட்டுக்கொண்டே இருந்தது. ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று விளையாடிய ரமன்தீப் சிங் தனியாளாக போராடினார்.

ஒரு கட்டத்தில் கைவிட்டுப்போன போட்டியை ரமன் தீப் மற்றும் நிஷாந்த் சிந்து இருவரும் மீட்டு எடுத்துவந்தனர். ஆனால் முக்கியமான நேரத்தில் நிஷாந்த் அவுட்டாகி வெளியேற இந்தியாவின் நம்பிக்கையும் கைவிட்டுப்போனது. இறுதிவரை போராடிய இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 186 ரன்கள் மட்டுமே சேர்த்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அதிகபட்சமாக ரமன்தீப் சிங் 64 ரன்கள் அடித்தார்.

இலங்கை ஏ மற்றும் ஆப்கானிஸ்தான் ஏ அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டியானது வரும் ஞாயிற்றுக் கிழமை நடைபெறவிருக்கிறது.