2024 ஆடவர் வளர்ந்துவரும் வீரர்களுக்கான டி20 ஆசியக்கோப்பை தொடரானது, 18-ம் தேதி தொடங்கி அக்டோபர் 27-ம் தேதிவரை மொத்தம் 10 நாட்கள் நடைபெற்றது.
இதுவரை 50 ஓவர்கள் கொண்ட தொடராகவே நடத்தப்பட்ட நிலையில், நடப்பாண்டுக்கான வளர்ந்துவரும் வீரர்களுக்கான ஆசியக்கோப்பை தொடரானது டி20 போட்டிகள் கொண்ட தொடராக முதல்முறையாக நடத்தப்பட்டது.
இந்த தொடரில் 8 ஆசிய அணிகளான “இந்தியா ஏ, பாகிஸ்தான் ஏ, இலங்கை ஏ, வங்கதேசம் ஏ, ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஹாங்காங் மற்றும் ஆப்கானிஸ்தான்” முதலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் சிறப்பாக செயல்பட்ட “இந்தியா ஏ, பாகிஸ்தான் ஏ, இலங்கை ஏ, ஆப்கானிஸ்தான் ஏ” முதலிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன.
முதல் அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கையும், இரண்டாவது அரையிறுதியில் பலம்வாய்ந்த இந்தியாவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன.
இந்நிலையில் இந்தியாவை அரையிறுதியில் தோற்கடித்த ஆப்கானிஸ்தான் அணி, இறுதிப்போட்டியில் இலங்கையையும் தோற்கடித்து கோப்பையை வென்று சரித்திரம் படைத்துள்ளது.
ஆசிய கண்டத்தில் சிறந்த அணி எது என்று நிரூபிக்கும் ஆசியக்கோப்பை தொடரில் இந்தியா, இலங்கை, வங்கதேசம் முதலிய அணிகளை தோற்கடித்தது மட்டுமில்லாமல், இறுதிப்போட்டியில் வென்று கோப்பையை தட்டிச்சென்றிருக்கும் ஆப்கானிஸ்தான் அணி எல்லோரையும் மிரளவைத்துள்ளது.
இன்று நடைபெற்ற பரபரப்பான இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, ஆப்கானிஸ்தானின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 15 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 65/5 என மோசமாக சென்ற போட்டியை 6வது வீரராக வந்து 64 ரன்கள் குவித்த சாஹன் மீட்டெடுத்தார். சாஹனின் அரைசதத்தின் உதவியால் 20 ஓவரில் 133 ரன்கள் சேர்த்தது இலங்கை அணி.
134 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணிக்கு இன்னிங்ஸின் முதல் பந்திலேயே விக்கெட்டை எடுத்து இலங்கை அதிர்ச்சி கொடுத்தது. ஆனால் அடுத்தடுத்துவந்த வீரர்கள் சுதாரித்து ஆட 19வது ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இறுதிப்போட்டியை வென்றது ஆப்கானிஸ்தான் அணி.
இந்தியா, இலங்கை போன்ற சாம்பியன் அணிகளை தோற்கடித்து ஆசிய கண்டத்தின் சிறந்த அணி நாங்கள் தான் என கோப்பை வென்று நிரூபித்துள்ளது ஆப்கானிஸ்தான் ஏ அணி.