shashank singh cricinfo
T20

'உயிரை கொடுத்து விளையாடிய Shashank..' ஆனால் பஞ்சாப் அணி செய்த மோசமான செயல்? விளாசிய முன்.வீரர்!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷசாங் சிங் தனியாளாக போட்டியை வென்று ஹீரோவாக மாறினார்.

Rishan Vengai

இந்திய இளம் வீரர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவந்து அவர்களின் எதிர்காலத்தையே தலைகீழாக திருப்பும் ஒரு இடமாக எப்போதும் ஐபிஎல் இருந்துவருகிறது. அந்தப் பட்டியல் இதுவரை ”ஜஸ்பிரித் பும்ரா, அஸ்வின் எனத்தொடங்கி ருதுராஜ் கெய்க்வாட், ரிங்கு சிங்” என ஸ்டார் வீரர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

அந்தவகையில் வெறும் இரண்டு சுற்று போட்டிகளையே கடந்திருக்கும் 2024 ஐபிஎல் தொடரில், இதுவரை “மயங்க் யாதவ், ரகுவன்சி, போரெல், மணிமாறன் சித்தார்த்” முதலிய வீரர்கள் தங்களுடைய திறமையால் ஹீரோவாக மாறியுள்ளனர். அவர்களை தொடர்ந்து நேற்றைய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 32 வயதான ஷஷாங்க் சிங் என்ற பஞ்சாப் வீரர் தனியாளாக டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி போட்டியின் ஹீரோவாக மாறினார்.

ஷசாங்

ஆனால் ஷசாங் சிங்கின் மீது நம்பிக்கை வைக்காத பஞ்சாப் கிங்ஸ் அணி, அவர் களத்தில் உயிரை கொடுத்து விளையாடிய போதும் அவருக்கான பாராட்டை வழங்கவில்லை. அதை கவனித்த முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா ஒட்டுமொத்த பஞ்சாப் அணியையும் விளாசியுள்ளார்.

ஷசாங் சிங்கை மதிக்காத பஞ்சாப் கிங்ஸ் அணி!

200 ரன்கள் என்ற கடினமான சேஸிங்கை மோசமான முறையில் தொடங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில், டாப் ஆர்டர் வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறி கோட்டைவிட்டனர். ஆனால் ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்து அழுத்தம் அதிகமான நிலையிலும், 25 பந்துகளில் அரைசதமடித்து 200 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடிய ஷசாங் சிங் கடைசிவரை போட்டியை விட்டுக்கொடுக்காமல் சண்டை செய்தார். இறுதிவரை களத்தில் இருந்த அவர், 29 பந்துகளில் 6 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என விளாசி 61 ரன்கள் அடித்து பஞ்சாப் கிங்ஸ் அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.

ஆனால் ஏமாற்றம் தரும்வகையில் ஷசாங் சிங் அரைசதமடித்த போது, பஞ்சாப் கிங்ஸ் டக் அவுட்டில் இருந்து ஒருவீரர் கூட பாராட்டும் விதமாக எந்தசெயலையும் செய்யவில்லை. ஒட்டுமொத்த அணியும் அமைதியுடன் இருந்தது “என்ன பா ஒருத்தர் உயிரை கொடுத்து விளையாடுறார், ஆனால் யாரும் பாராட்டும் விதமாக கைகளை கூட தட்டவில்லையே” என பார்ப்போருக்கும் ஏமாற்றத்தை அளித்தது.

இந்த நிகழ்வை விமர்சித்திருக்கும் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா, ”எனக்கு புரியவில்லை, முழு அணியும் அமைதியாக இருக்கிறது. ஷசாங்கின் அரைசதத்தை அவர்களின் அணியே ஒப்புக்கொள்ளவில்லை. அவர் உங்களுக்காத தான் விளையாடிக்கொண்டிருக்கிறார், 25 பந்துகளில் 200 ஸ்டிரைக்ரேட்டில் 50 ரன்கள் அடித்து போட்டியை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார். அவர் உங்கள் அணிக்கு சிபிஆர்” என்று விமர்சித்து பேசியுள்ளார்.