தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 2024 டி20 உலகக் கோப்பை தொடரை வென்று அசத்தியிருக்கிறது இந்தியா. 2007ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் இந்தக் கோப்பையை வென்று சரித்திரம் படைத்திருக்கிறது ரோஹித் அண்ட் கோ. இந்த வெற்றிக்கு மிகமுக்கியக் காரணமாக விளங்கியிருக்கிறார் வேகப்பந்து சூப்பர் ஸ்டார் ஜஸ்ப்ரித் பும்ரா. ஒவ்வொரு போட்டியிலும் அசத்தி இந்த தொடரின் நாயகனாகவும் அங்கீகாரம் பெற்றிருக்கிறார் அவர்.
ஜஸ்ப்ரித் பும்ரா - இந்தத் தலைமுறையின் மிகச் சிறந்த பௌலர். டெஸ்ட், ஒருநாள், டி20 என ஒவ்வொரு ஃபார்மட்டிலும் முடிசூடா மன்னனாக கோலோச்சி வருகிறார். அறிமுகம் ஆன காலகட்டத்தில் தன்னுடைய வித்தியாசமான பௌலிங் ஆக்ஷனுக்காக பேசப்பட்ட இவர், அதன்பிறகு ஒவ்வொரு ஃபார்மட்டிலும் தன்னை நிரூபித்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் பாராட்டையும் பெற்றுவருகிறார். ஒவ்வொரு முறை அவர் பந்துவீசும்போதும் ஏதாவது ஒரு மேஜிக்கை நிகழ்த்துகிறார். எந்தவொரு எதிரணி வீரராக இருந்தாலும் அவர்களை தனது அபார பந்துவீச்சால் திக்குமுக்காட வைக்கிறார். இந்த டி20 உலகக் கோப்பையிலும் அவர் அதையே தான் செய்திருக்கிறார்.
இந்த உலகக் கோப்பையில் 15 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருக்கிறார் பும்ரா. ஆனால் விக்கெட்டுகள் அல்ல விஷயம். இரண்டு பௌலர்கள் இந்தத் தொடரில் அவரை விட அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார்கள். ஏன், இந்தியாவின் ஆர்ஷ்தீப் சிங்கே 17 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். ஆனால், பும்ராவை அனைவரை விடவும் தனித்துக் காட்டுவது அவரது எகானமி. இந்த உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பௌலர்கள் பட்டியலில் டாப் 20 இடங்களில் இருப்பவர்களில் இரண்டு பௌலர்கள் மட்டுமே ஆறுக்கும் குறைவான எகானமி வைத்திருக்கிறார்கள். ஒன்று தென்னாப்பிரிக்காவின் ஆன்ரிக் நார்கியா (எகானமி - 5.74). மற்றொன்று பும்ரா. அவரது எகானமி 4.17. ஆம், அவருக்கும் நார்கியாவுக்கும் இடையேயே ஓவருக்கு 1.57 ரன்கள் வித்தியாசம். அதாவது ஒரு போட்டிக்கு 6 ரன்கள்! அந்த அளவுக்கு சிக்கனமாகப் பந்துவீசி மிரட்டியிருக்கிறார் பூம் பூம்.
மொத்தம் இந்த உலகக் கோப்பையில் 29.4 ஓவர்கள் பந்துவீசியிருக்கிறார் பும்ரா. அதாவது 178 பந்துகளில். அதில் 110 டாட் பால்கள். பவர்பிளேவில் மட்டுமே 55 டாட் பால்கள் வீசியிருக்கிறார் அவர். பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆட நினைக்கும் பவர்பிளேவில் இவர் ரன் அடிக்கவே விடுவதில்லை. தொடர்ந்து கடினமான பந்துகளை வீசி ரன் போக்கை கட்டுப்படுத்துகிறார். அதனால் நெருக்கடிக்கு ஆளாகும் பேட்ஸ்மேன்கள் ஆர்ஷ்தீப், அக்ஷர் போன்ற மற்ற பௌலர்களை அட்டாக் செய்ய நினைத்து அவரிடம் விக்கெட்டுகளை இழந்தார்கள். அதனால் பெரும்பாலான போட்டிகளில் பவர்பிளேவிலேயே இந்திய அணி அந்த இன்னிங்ஸை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடும்.
பவர்பிளேவில் எப்படி எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி ஏற்படுத்துகிறாரோ அதேபோல் மிடில் ஓவர்களிலும் சவால் கொடுக்கிறார் பும்ரா. அங்கும் மொத்தம் 28 டாட் பால்கள் வீசியிருக்கிறார். டெத் ஓவர்கள் என்று வரும்போது அவர் பௌலிங் இன்னும் வேறு லெவலில் இருக்கிறது. ஒரு ஏலியனாகவே மாறிவிடுகிறார் அவர். இந்த உலகக் கோப்பையில் டெத் ஓவர்களில் மட்டுமே 27 டாட் பால்கள் வீசியிருக்கிறார். பெரும்பாலான அணிகள் அந்த காலகட்டத்தில் ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் அடிக்க நினைக்கும் தருவாயில், இவர் அதையெல்லாம் மிகப் பெரிய இலக்காக மாற்றிவிடுகிறார். டெத் ஓவர்களில் வீசப்படும் ஒவ்வொரு டாட் பாலும் இரு மடங்கு நெருக்கடியை பேட்ஸ்மேன்களுக்கு ஏற்படுத்திவிடுகிறது. அது விக்கெட் விழவும் காரணமாகிவிடுகிறது.
டாட் பால்களை ஒருபக்கம் விட்டுவிடுங்கள், ரன் வரும் பந்துகளில் பேட்ஸ்மேன்களால் எவ்வளவு ரன்கள் எடுக்க முடிகிறது என்பதும் ஒரு மிகப் பெரிய கேள்வி. ஓவருக்கு குறைந்தபட்சம் 3 டாட் பால்கள் வீசுகிறார் எனும்போது, மீதமிருக்கும் 3 பந்துகளில் எவ்வளவு ரன்கள் எடுக்கப்படுகிறது என்பதும் முக்கியம் அல்லவா. அதில் ஒரு பௌண்டரி வந்தாலும் கூட அந்த ஓவரில் எப்படியும் குறைந்தபட்சம் 6-7 ரன்கள் வந்துவிடும். ஆனால் பும்ராவின் பந்துவீச்சில் பௌண்டரி அடிப்பதெல்லாம் எளிதான விஷயம் இல்லை.
இந்த உலகக் கோப்பையில் ஒட்டுமொத்தமாகவே 12 பௌண்டரிகள் தான் கொடுத்திருக்கிறார் பும்ரா. அதாவது ஒவ்வொரு 15 பந்துக்கும் ஒரு பௌண்டரி. அந்த எட்டிலும் கூட 4 எட்ஜில் வந்தது. பேட்ஸ்மேன்களாக அடிக்க நினைத்து வந்தது மொத்தம் 8 பௌண்டரிகள் தான். பும்ராவை அட்டாக் செய்வது பேட்ஸ்மேன்களுக்கு அவ்வளவு கடினமாக இருந்திருக்கிறது.
இந்த உலகக் கோப்பை ஃபைனலில் கூடப் பார்த்தோம். 18வது ஓவரைப் பந்துவீச வந்த அவர் வெறும் 2 ரன்கள் மட்டுமே கொடுத்தார். முக்கியமாக யான்சனின் விக்கெட்டை வீழ்த்தி தென்னாப்பிரிக்காவுக்கு பெரும் நெருக்கடி கொடுத்தார். கேஷவ் மஹாராஜ் ஒரு சிங்கிள் எடுக்கக் கூட முடியாமல் தடுமாறியதை நன்கு பார்த்தோம். அதுதான் பும்ரா. ஒவ்வொரு முறை பந்தைக் கையில் எடுத்து வரும்போதும் பேட்ஸ்மேன்களுக்கு பெரும் சவாலை ஏற்படுத்துகிறார் அவர். அவரது வேரியேஷன்களால் பேட்ஸ்மேன்கள் ஆடிப்போகிறார்கள். எதிரணி எவ்வளவு நல்ல நிலையில் இருந்தாலும், போட்டி தன் அணியிடமிருந்து எவ்வளவு தூரம் விலகிச் சென்றிருந்தாலும் பும்ரா தன் ஒவ்வொரு பந்தின் மூலமும் அதை இழுத்துப் பிடிக்கிறார். தனி ஆளாக போட்டியின் முடிவை மாற்றுகிறார். மிகப் பெரிய மேட்ச் வின்னராகத் திகழ்கிறார். 21ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த ஃபாஸ்ட் பௌலர் தானே என்பதை உலகக் கோப்பை எனும் மாபெரும் அரங்கில் நிரூபித்திருக்கிறார். அவர் கையை அடையும் பாக்கியத்தை அந்த உலகக் கோப்பைக்கும் கொடுத்திருக்கிறார்!