சூர்யகுமார் - சஞ்சு சாம்சன் web
T20

47 பவுண்டரிகள், 22 சிக்சர்கள்! ஒரு 'World Record' உட்பட ஒரே போட்டியில் 8 சாதனைகள் படைத்த இந்திய அணி!

Rishan Vengai

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.

முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என வென்ற இந்திய அணி தொடரை கைப்பற்றி அசத்தியது. அதனைத்தொடர்ந்து டி20 தொடர் நடைபெற்று வந்தது. முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2-0 என இந்தியா முன்னிலை பெற்றது.

ind vs ban

இந்நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையேயான கடைசி மற்றும் 3வது டி20 போட்டி இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சிக்சர் மழை பொழிந்து 297 ரன்களை பதிவுசெய்து சாதனை படைத்தது.

ஒரே ஓவரில் 5 சிக்சர்கள்.. 40 பந்தில் சதம்!

வங்கதேசத்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்கவீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன், 9 பவுண்டரிகள் 8 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டி வெறும் 40 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இதில் ஒரு ஓவரில் 5 சிக்சர்கள் அடித்ததும் அடங்கும்.

சஞ்சு சாம்சன் 111 ரன்கள், சூர்யகுமார் யாதவ் 75 ரன்கள், ஹர்திக் பாண்டியா 47 ரன்கள் என விளாச 20 ஓவர் முடிவில் 297 ரன்களை குவித்து சாதனை படைத்தது இந்தியா.

சஞ்சு சாம்சன்

298 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் விளையாடிய வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் மட்டுமே அடித்து 133 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அதிக பட்சமாக ரவிபிஸ்னோய் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

ரவி பிஸ்னோய்

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என கைப்பற்றி வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்தது இந்திய அணி..

ஒரே போட்டியில் இந்தியா படைத்த 8 சாதனைகள்..

1. 47 பவுண்டரிகள்: இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிரான ஒரே இன்னிங்ஸில் 47 பவுண்டரிகளை விரட்டி உலகசாதனை படைத்தது. இதற்கு முன்னர் ஒரு இன்னிங்ஸில் 43 பவுண்டரிகள் அடித்ததே சாதனையாக இருந்தது.

2. 297 ரன்கள்: சர்வதேச டி20 போட்டியில் இரண்டாவது அதிகபட்ச டோட்டலை பதிவுசெய்தது இந்தியா. முதலிடத்தில் நேபாள் பதிவுசெய்த 314 ரன்கள் நீடிக்கிறது.

ஒரு ஃபுல் மெம்பர் கிரிக்கெட் நாடு அடித்த அதிகபட்ச ஸ்கோராக இது பதிவுசெய்யப்பட்டது.

சஞ்சு சாம்சன்

3. 22 சிக்சர்கள்: ஒரு டி20 இன்னிங்ஸில் ஃபுல் மெம்பர் கிரிக்கெட் நாடு பதிவுசெய்த அதிகபட்ச சிக்சர்களாக பதிவுசெய்யப்பட்டது. இந்த சாதனையை ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் உடன் இந்தியா பகிர்ந்துள்ளது.

4. அதிவேக சதம்: 40 பந்துகளில் சதமடித்த சஞ்சு சாம்சன் அதிவேகமாக டி20 சதமடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். 35 பந்துகளில் சதம் அடித்து ரோகித் சர்மா முதலிடத்தில் இருக்கிறார்.

சூர்யகுமார்

5. அதிவேக 100 : இந்தியா 7.1 ஓவரில் 100 ரன்களை கடந்து சாதனை படைத்தது. இது ஒரு அணியாக இந்தியாவின் அதிவேகமாக பதிவுசெய்யப்பட்டது. இதற்குமுன்னர் இந்தியா 8 ஓவர்களுக்கு 100 ரன்களை அடித்திருந்தது.

6. அதிக ரன்ரேட்: சஞ்சு சாம்சன் மற்றும் சூர்யகுமார் யாதவ் சேர்த்த 173 ரன்கள் பார்ட்னர்ஷிப்பானது 15.04 ரன்ரேட்டில் பதிவுசெய்யப்பட்டது. ஒரு ஃபுல் மெம்பர் கிரிக்கெட் நாடு அடித்த அதிக ரன்ரேட்டுடன் 150 ரன்கள் என்ற சாதனையை இந்தியா படைத்தது.

பராக் - ஹர்திக்

7. அதிக பவர்பிளே ஸ்கோர்: இந்தியா பவர்பிளேவில் 82 ரன்கள் விளாசி தன்னுடைய அதிகபட்ச சாதனையை சமன்செய்துள்ளது.

8. 5 சிக்சர்கள் : ஒரே ஓவரில் 5 சிக்சர்களை விளாசிய சஞ்சு சாம்சன், ஒரு ஓவரில் அதிக ரன்களை அடித்த 5வது இந்திய வீரராக மாறினார்.