டி20 உலகக்கோப்பையில் பல வியப்பூட்டும் வெற்றிகள் நிகழ்ந்தாலும், நமீபியாவிடம் இலங்கை தோற்ற சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஏனென்றால் அப்போதுதான் 2022 ஆசிய கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டு சாம்பியன் அணிகளை வீழ்த்தி, ஆசிய கோப்பையை வென்ற கையோடு டி20 உலகக்கோப்பைக்குள் காலடிவைத்திருந்தது இலங்கை அணி.
நமீபியா தானே என்ற எண்ணத்தில் வந்தார்களா தெரியவில்லை, ஆனால் 2022 டி20 உலகக்கோப்பையின் முதல் ஆட்டத்தில் நமீபியா இலங்கையை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 2014 டி20 உலகக்கோப்பை வெற்றியாளர்களான இலங்கையை 55 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து கிரிக்கெட் உலகை ஸ்தம்பிக்க வைத்தது நமீபியா அணி.
இலங்கை அணி 164 ரன்கள் இலக்கை துரத்த முடியாமல் 19 ஓவர்களில் 108 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி படுமோசமான தோல்வியை பதிவுசெய்தது.
டி20 கிரிக்கெட் என்றாலே உலக சாம்பியன்களை கூட மிரளவைக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியை, கத்துக்குட்டி அணியாக இருந்த ஆப்கானிஸ்தான் குறைந்த டோட்டலை வைத்து சம்பவம் செய்தது என்றால் அந்த அப்செட்டை என்னவென்று சொல்வது.
2016 டி20 உலகக்கோப்பையில் 30வது லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸை எதிர்கொண்ட ஆப்கானிஸ்தான் அணி, முதலில் பேட்டிங் செய்து 123 ரன்களை சேர்த்தது. ஆனால் 124 ரன்களை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, ரசீத் கான் மற்றும் முகமது நபியின் சுழலில் சிக்கி 117 ரன்களை மட்டுமே அடித்து படுதோல்வியை சந்தித்தது.
அந்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் “லெவிஸ், டிவெய்ன் பிராவோ, டேர்ரன் சமி, ஆண்ட்ரே ரஸ்ஸல், பிராத்வெயிட்” முதலிய பெரிய பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இதில் கவனிக்கப்படவேண்டிய விசயம் என்றால், 2016 உலகக்கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் அணி தட்டிச்சென்றது. அந்த தொடரில் அந்த அணி ஒரு போட்டியில் மட்டுமே தோல்வியை சந்தித்திருந்தது, அது ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டி.
"Home of Cricket" என கிரிக்கெட் பிறந்த இடமாக கொண்டாடப்படும் இங்கிலாந்தின் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நெதர்லாந்து அணி அப்படி ஒரு வெற்றியை பதிவுசெய்யும் என யாரும் கனவில் கூட எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள்.
2009 டி20 உலகக்கோப்பையில் காலிங்வுட் தலைமையில், ”ரவி போபரா, லுக் ரைட், இயன் மோர்கன், அடில் ரசீத், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்” என பல நட்சத்திர வீரர்களுடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியால், அந்த மாபெரும் அப்செட்டை தடுத்து நிறுத்தமுடியவில்லை.
இங்கிலாந்து அடித்த 163 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய நெதர்லாந்து அணி கடைசி பந்தில் 1 பந்துக்கு 2 ரன்கள் தேவையென்ற இடத்தில் வைத்து வெற்றிபெற்றது. சமனிற்கு செல்லவேண்டிய போட்டியை ஓவர் துரோ மூலம் தோல்விக்கு அழைத்துச்சென்றார் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட். லார்ட்ஸில் வைத்து இங்கிலாந்தை சம்பவம் செய்த நெதர்லாந்து அணி, ஒரு வரலாற்று அப்செட்டை தங்களின் பெயரில் எழுதியது.
2003-ம் ஆண்டுவரை ஒரு நல்ல முன்னேற்றமடைந்த கிரிக்கெட் நாடாக இருந்த ஜிம்பாப்வே அணி, பல அரசியல் காரணங்களுக்காக 2003-லிருந்து வீரர்கள் வெளியேறிய பிறகு இன்னும் மீண்டுவர முடியாமல் இருந்துவருகிறது. 2003-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் ஆடாத ஜிம்பாப்வே அணி, 2003 ஒருநாள் உலகக்கோப்பையில் ஒரு போட்டியில் கூட வெற்றியை பெறாமல், 2007 டி20 உலகக்கோப்பைக்குள் காலடி வைத்தது.
2007 டி20 உலகக்கோப்பையில் ”ஆடம் கில்கிறிஸ்ட், மேத்யூ ஹைடன், ரிக்கி பாண்டிங், ஆண்ட்ரோ சைமன்ஸ், மைக் ஹஸ்ஸி, பிராட் ஹோட்ஜ், பிராட் ஹேடின், பிரிட் லீ, நாதன் பிராக்கன், மிட்செல் ஜான்சன்” என பார்த்தாலே பயம்கொள்ளும் அளவிலான அணியை கொண்டிருந்த ஆஸ்திரேலியா, டி20 உலகக்கோப்பையை வெல்லும் என நூற்றுக்கு 90% கூறப்பட்டது.
ஆனால் அப்படிப்பட்ட மொரட்டு அணியை ஜிம்பாப்வே அசால்ட்டாக வீழ்த்தியது இன்றளவும் டி20 உலகக்கோப்பையில் மிகப்பெரிய அப்செட்டாக இருந்துவருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியை தங்களுடைய அபாராமான பந்துவீச்சு மூலம் 138 ரன்னில் சுருட்டிய ஜிம்பாப்வே அணி, டெய்லரின் அபாரமான ஆட்டத்தால் கடைசி ஓவரில் வெற்றியை தட்டிச்சென்றது.
2022 டி20 உலகக்கோப்பையில் பல சிறிய அணிகள், பெரிய அணிகளை பதம்பார்த்தன. அந்தப்பட்டியலில் 130 ரன்களை அடிக்க முடியாமல் 1 ரன்னில் தோல்வியை தழுவிய பாகிஸ்தான் அணியின் தோல்வியானது மிகப்பெரிய அப்செட்டாக அமைந்தது.
முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 130 ரன்கள் சேர்த்தது. அதற்குபிறகு இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு எதிராக அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜிம்பாப்வே அணி, இறுதிவரை விட்டுக்கொடுக்காமல் போராடியது.
கடைசி 6 பந்துக்கு 11 ரன்கள் தேவையிருந்த போது, பாகிஸ்தான் அணி 120/6 என்ற நிலையில் வெற்றியின் பக்கமே இருந்தது. முதல் இரண்டு பந்துக்கு 7 ரன்களை எட்டிய பாகிஸ்தான் அணி, அந்த போட்டியில் எப்படி தோல்வியை தழுவியது என்று இன்றுவரை புரியவில்லை. கடைசி 4 பந்துக்கு 4 ரன்கள் என இருந்த போட்டியை 1 ரன் வித்தியாசத்தில் கோட்டைவிட்டது பாகிஸ்தான் அணி. பாகிஸ்தான் இன்றுவரை “இவங்க இன்னும் திருந்தல மாமா” என்ற விதத்தில் தான் விளையாடிவருகிறது.
2010-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை இங்கிலாந்து வென்றதற்கு பெரிய காரணமாக இருந்தது, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது தான். வெல்லவேண்டிய போட்டியில் இங்கிலாந்தை 120 ரன்னுக்கு சுருட்டியிருந்தது அயர்லாந்து அணி, பின்னர் இரண்டாவது இன்னிங்ஸின் போது மழை குறுக்கிட்டதால் இரண்டு அணிகளுக்கும் புள்ளிகள் பிரித்துவழங்கப்பட்டன. ரன்ரேட் கூடுதலாக இருந்ததால் தொடரிலிருந்தே வெளியேற வேண்டிய இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.
பின்னர் அதிர்ஷ்டவசமாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது. ஒருவேளை அன்றைய அயர்லாந்து போட்டி நடைபெற்றிருந்தால், இங்கிலாந்திற்கு கோப்பையே கிடைத்திருக்காது.
இந்நிலையில் 2010-ல் தவறிப்போன அப்செட்டை, 2022-ல் நிறைவேற்றியது அயர்லாந்து அணி. முதலில் பேட்டிங் ஆடிய அயர்லாந்து அணி 157 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. பின்னர் இங்கிலாந்து அணி 15வது ஓவரில் 105/5 என்று இருந்தபோது மழைகுறுக்கிட்டதால், DLS முறைப்பட வெற்றிபெறவேண்டிய ஸ்கோரை விட ஐந்து ரன்கள் பின்தங்கியிருந்ததால் அயர்லாந்து அணி வெற்றியை தன்வசப்படுத்தியது.
12 வருடங்கள் கழித்து தங்களுடைய வெற்றியை தக்கவைத்துக்கொண்டது அயர்லாந்து அணி.
டி20 உலகக்கோப்பையில் இதுவரை பல கத்துக்குட்டி அணிகள், கிரிக்கெட் பாரம்பரியமிக்க பெரிய நாடுகளை வீழ்த்தி மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருந்தாலும், பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்கா ஏற்படுத்திய அப்செட் மிகப்பெரிய அப்செட்டாகும்.
காரணம் இதற்குமுன்புவரை சூப்பர் ஓவர்வரை சென்று ஒரு பெரிய அணி சிறிய அணியிடம் தோற்றதில்லை, அதேநேரத்தில் டி20 கிரிக்கெட்டில் முதல்முறையாக ஒரு அணியிடம் மோதும் போது ஒரு பெரிய நாடு தோல்வியை கண்டதில்லை. அப்படியான தோல்வியை தான் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு பரிசாக கொடுத்துள்ளது.
இதில் கொடுமை என்னவென்றால், “ஷாஹீன் அப்ரிடி, அமீர், ஹாரிஸ் ராஃப், நசீம் ஷா” முதலிய 4 உலகத்தர பந்துவீச்சாளர்கள் அணியில் இருந்தது தான். பாகிஸ்தான் அடித்த 159 ரன்களை, அமெரிக்காவும் திருப்பி அடித்ததால் போட்டி சமன்செய்யப்பட்டு சூப்பர் ஓவருக்கு சென்றது.
எப்படியும் சூப்பர் ஓவரில் பாகிஸ்தான் தான் வெல்லப்போகிறது என்று எதிர்ப்பார்க்கப்பட்ட போது, சூப்பர் ஓவரை வீசிய அனுபவம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர் அமீர் அழுத்தத்தில் அதிகப்படியான ஒய்டு பந்துகளை வீசி 18 ரன்களை விட்டுக்கொடுத்தார். பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணியால் 13 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. முடிவில் பாகிஸ்தானை சூப்பர் ஓவரில் வீழ்த்திய அமெரிக்கா அணி டி20 உலகக்கோப்பை வரலாற்றில் மிகப்பெரிய அப்செட்டை நிகழ்த்தியது.