விளையாட்டு

"ஐபிஎல் போட்டிக்காக டி20 உலகக் கோப்பை ஒத்திவைக்கப்பட்டது" பாக். வீரர்கள் காட்டம் !

"ஐபிஎல் போட்டிக்காக டி20 உலகக் கோப்பை ஒத்திவைக்கப்பட்டது" பாக். வீரர்கள் காட்டம் !

jagadeesh

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற வேண்டும் என்ற காரணத்துக்காக டி20 உலகக் கோப்பை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததையடுத்து மார்ச் 29ஆம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் போட்டிகள் ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. பின்பு, இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட காரணத்தால் திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டிகள் நடைபெறவில்லை. மேலும் ஐபிஎல் போட்டிகள் செப்டம்பரில் நடத்தப்படலாம், வெளிநாடுகளில் நடக்கலாம் என்ற செய்திகள் வெளியாகின.

இதனையடுத்து ஐபிஎல் போட்டியை தங்கள் நாட்டில் நடத்தலாம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம், ஐக்கிய அரபு அமீரகமம், நியூசிலாந்து ஆகியவை பிசிசிஐ-க்கு கோரிக்கை விடுத்தன. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 26 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 7 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி அடுத்தாண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டதால், அந்தத் தேதிகளை பயன்படுத்தி ஐபிஎல் போட்டிகளை பிசிசிஐ நடத்துகிறது.

டி20 உலகக் கோப்பை ஒத்திவைக்கப்பட்டதற்கு பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஷோயப் அக்தர், ரஷீத் லடீஃப் ஆகியோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் "ஆசிய கோப்பை தொடர் நிச்சயம் நடத்தி இருக்கலாம். அதில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் வாய்ப்பு இருந்தது. ஆனால், அதை தள்ளி வைத்ததின் பின்னணியில் பல காரணங்கள் இருக்கிறது. டி20 உலகக்கோப்பை தொடரும் நடந்து இருக்கலாம். ஆனால், நான் முன்பே சொன்னது போல அவர்கள் அதை நடத்த விட மாட்டார்கள். ஐபிஎல்-லுக்கு எந்த சேதமும் வந்துவிடக் கூடாது. ஆனால், உலகக்கோப்பை நரகத்துக்கு கூட செல்லலாம்" என காட்டமாக தெரிவித்துள்ளார்.

இதே போல பாகிஸ்தான் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான ரஷீத் லதீப் பிசிசிஐ தன்னுடைய ஆதிக்கத்தை பயன்படுத்தி உலகக் கோப்பை டி20 போட்டியை ஒத்திவைத்திருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.