இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது. நான்கு ஓவர்கள் மீதமிருந்த நிலையில், 16 ஓவர்களிலேயே 169 ரன்களை குவித்து இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியின் ஹால்ஸ் 86, பட்லர் 80 ரன்கள் குவித்தனர். முதல் ஓவர் தொடங்கிய அதிரடி 16 ஓவர் வரை நின்றபாடில்லை. இருவரும் அப்படி ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குரூப் 12 சுற்றில் அசத்தலாக விளையாடி அரையிறுதிக்குள் நுழைந்த இந்திய அணி எதிர்பார்க்காத வகையில் படுதோல்வி அடைந்துள்ளது.
இந்திய அணிக்கு தோல்விக்கு பல காரணங்கள் இருந்தாலும் 5 முக்கிய காரணங்களை இங்கே பார்க்கலாம்!
தொடக்க வீரர்களின் சொதப்பல்!
இந்திய அணிக்கு மிகப்பெரிய பிரச்சனையே தொடக்க வீரர்கள்தான். ஒரு அணியில் தொடக்க வீரர்களில் யாராவது ஒருவர் ஃபார்மில் இருக்க வேண்டும். ஒருவர் நிதானமாக ஆடினால் ஒருவர் ஹிட் அடிக்க வேண்டும். ஒருவர் ஆட்டமிழந்துவிட்டால் ரன் வேகம் குறையாமல் மற்றொருவர் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால், இந்த தொடரில் கே.எல்.ராகுல் - ரோகித் சர்மா இணை பெரிதாக எதனையும் செய்யவில்லை. கே.எல்.ராகுல் கடந்த இரண்டு போட்டியில் அரை சதம் அடித்தார். ஆனால், முக்கியமான இன்றையப் போட்டியில் சொதப்பிவிட்டார்.
முக்கியமான இந்தப் போட்டியில் ராகுல் 5 பந்துகளில் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, 28 பந்துகளை சந்தித்த ரோகித் சர்மா வெறும் 27 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். ரோகித் சர்மாவின் நிதானமான ஆட்டம் பவர் பிளேவில் ரன் குவிப்பை தடுத்துவிடுகிறது. முதல் 10 ஓவர்களில் இந்திய அணி 63 ரன்கள் மட்டுமே எடுத்தது. விராட் கோலி நிதானமாக விளையாடினாலும் கடைசியில் சிக்ஸர், பவுண்டரிகளை அடித்து வீணடித்த பந்துகளை ஓரளவுக்கு ஈடுகட்டுவிடுவார்.
ரோகித் சர்மா இந்த தொடரின் ஒரு போட்டியில் கூட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. 6 போட்டிகளில் விளையாடி 116 ரன்கள் மட்டுமே எடுத்தார். கே.எல்.ராகுல் 6 போட்டிகளில் விளையாடி 128 ரன்கள் எடுத்தார். நடப்பு தொடரில் பெரும்பாலும் விராட் கோலி - சூர்யகுமார் யாதவ் தான் அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர்.
மணிக்கட்டு ஸ்பின்னர் இல்லாதது!
இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் எவ்வளவு போராடியும் இன்றையப் போட்டியில் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியவில்லை. பவர் பிளேவில் வேகப்பந்துவீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்த முடியாத போது அந்தப் பொறுப்பு மிடில் ஓவர்களில் பந்துவீசும் ஸ்பின்னர்களுக்கு வந்துவிடும். ஆனால், ஸ்பின்னர்களான அஸ்வின், அக்ஸர் பட்டேல் இருவரும் பெரிய அளவில் ரன்களையும் கட்டுப்படுத்தவில்லை. ரன்களையும் வாரி வழங்கினர். இந்த இடத்தில்தான் ஒரு முக்கிய ஒரு தவறை இந்திய அணி செய்தது. ரிஸ்ட் எனப்படும் மணிக்கட்டு ஸ்பின்னர் ஒருவரை அணியில் வைத்திருக்க வேண்டும். அதாவது அக்ஸர் அல்லது அஸ்வின் இருவரில் ஒருவருக்கு பதிலாக சாஹலை அணியில் இடம்பெற செய்திருக்க வேண்டும். சாஹல் பந்துவீச்சில் நிச்சயம் விக்கெட் எடுக்க வாய்ப்பு இருந்திருக்கும். இங்கிலாந்து அணியில் அடில் ரஷித் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் சாய்த்தார்.
புவனேஷ்வர், ஷமிக்கு என்ன ஆச்சு?
இந்திய அணியில் மிகவும் அனுபவம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர்களாக புவனேஷ்வர்குமார், முகமது ஷமி இருவரும் உள்ளனர். ஆனால், இருவரும் இந்த தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தும் பந்துவீச்சை வழங்கவில்லை. அர்ஸ்தீப் சிங் விக்கெட் வீழ்த்தும் அளவிற்கு கூட இருவரும் எடுக்கவில்லை. முக்கியமான இன்றையப் போட்டியில் இவர்களது பந்துவீச்சில் இங்கிலாந்து வீரர்கள் வெளுத்து வாங்கினர். முதல் ஓவரிலேயே புவனேஷ்வர் 3 பவுண்டரிகளை விட்டுக்கொடுத்தார். வேரியேஷன் ஏதும் இல்லாமலும், யார்க்கர் அதிகம் பயன்படுத்தாமல் அடிக்கும் அளவிற்கே பந்துவீசினர். அதனால், சிரமம் இல்லாமல் ஹால்ஸ், பட்லர் இருவரும் ரன்களை குவித்து தள்ளினர். லெத் பவுண்சரையும் சரியாக வீசி திணறடிக்கவில்லை. ஒன்று இரண்டு ஓவர்கள் நெருக்கடி கொடுத்திருந்தாலே ஆட்டத்தின் ஏதோ ஒரு தருணத்தில் விக்கெட் வீழ்ந்திருக்கும். அதற்கு எவ்வித வாய்ப்பையும் பவுலர்கள் உருவாக்கவில்லை.
மைதானத்தை தவறாக கணித்தது!
இந்திய அணி முதலில் ஒன்றை தெளிவாக புரிந்து வைத்திருக்க வேண்டும். அடிலெய்டு மைதானம் அளவில் சிறியது. 70-80 மீட்டர்களில் சிக்ஸர்கள் விளாச முடியும். அப்படி இருக்கையில் முதலில் பேட்டிங் செய்யும் அணி 180-200 ரன்கள் குவித்தால்தான் பின்னர் விளையாடும் இங்கிலாந்து அணிக்கு சவாலாக அமைந்திருக்கும். ஆனால், இந்திய அணி பார் ஸ்கோர் ஆன 168 ரன்களை மட்டுமே எடுத்தது. இதற்கு காரணம், இந்திய அணி முதல் 10 ஓவர்களில் வெறும் 63 ரன்கள் அடித்ததுதான். பவர் பிளேவை இந்திய அணி சரியாக பயன்படுத்தவே இல்லை. நிறைய டாட் பந்துகளை கொடுத்தனர். ஒருவேளை கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்ட்யா சிக்ஸர், பவுண்டரிகளை விளாசியிருக்கவில்லை என்றால் இன்னும் மோசமாக இருந்திருக்கும்.
ரோகித் சர்மாவின் கேப்டன்சி!
இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 168 ரன்கள் குவித்த நிலையில், வெற்றி வாய்ப்பு சம அளவிலேயே இருந்திருக்கும். பவுலர்கள் மற்றும் வீரர்களின் சிறப்பான பீல்டிங்கை பயன்படுத்திதான் இந்திய அணி வெற்றி பெற்றிருக்க முடியும். அதற்கு கேப்டன் ரோகித் சர்மாவின் பணி மிகவும் அவசியமான ஒன்று. ஆனால், பந்துவீச்சாளர்களை சரியாக ரொட்டேட் செய்யாதது. பீல்டிங் சரியாக செட் செய்யாதது என கேப்டன்சி குறைபாடுகள் இன்றைய போட்டியில் நிறையவே இருந்தது.
குரூப் 1 சுற்றில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய பலம் வாய்ந்த அணிகள் இருந்தன. குரூப் 2வில் இந்திய அணிக்கு போட்டி மிகவும் குறைவாகவே இருந்தது. அதனால் அந்தச்சுற்றில் இந்திய அணியின் தவறுகள் பெரிய அளவில் பாதிக்கவில்லை. ஆனால், நாக் அவுட் சுற்றான இன்றையப் போட்டியில் தவறுகள் அனைத்து ஒட்டுமொத்தமாக இந்திய அணியை படுதோல்வி அடையச் செய்துவிட்டது.
நடப்பு தொடரில் சூர்யகுமார் மற்றும் விராட் கோலியின் ஆட்டம்தான் இந்திய அணிக்கு மிகப்பெரிய ஆறுதலாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.