இந்தாண்டு அக்டோபரில் நடைபெறவிருந்த ஐசிசி டி20 போட்டிகள் அடுத்தாண்டு ஒத்திவைக்கப்பட இருப்பதாகவும் அது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 18 ஆம் தேதி முதல் நவம்பர் 15 ஆம் தேதி வரை இருபது ஓவர் உலகக்கோப்பை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக, உலகளவில் விளையாட்டு தொடர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், நடப்பு ஆண்டு இருபது ஓவர் உலகக் கோப்பை தொடர் நடைபெறுமா எனச் சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பையைத் திட்டமிட்டபடி நடத்தலாமா அல்லது அடுத்தாண்டு வரை ஒத்திவைக்கலாமா என்பது குறித்து ஐசிசி நிர்வாகக் குழு மே 28 ஆம் தேதி கூடி ஆலோசித்து முக்கிய முடிவுகளை எடுக்க இருக்கிறது. இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ள ஐசிசி நிர்வாகக் குழு உறுப்பினர் ஒருவர் "கூட்டத்தின் போது மூன்று முக்கிய விஷயங்களை விவாதிப்போம். முதலில் திட்டமிட்டபடி போட்டித் தொடரை நடத்துவது, இரண்டாவது ரசிகர்களை மைதானத்தில் அனுமதிப்பது, மூன்றாவது ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்துவது" என அண்மையில் தெரிவித்திருந்தார்.
மேலும் தொடர்ந்த அவர் இதில் கடைசிக் கட்டமாக "உலகக் கோப்பை போட்டியை அடுத்தாண்டில் நடத்துவது. போட்டியை நடத்தவில்லை என்றால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கடுமையான நஷ்டத்தைச் சந்திக்கும். எனினும் மே 28 ஆம் தேதி ஐசிசி ஆலோசனைக் கூட்டத்தில் இது தொடர்பான விஷயங்கள் பேசப்படும்" என்றார்.
ஆனால் இப்போது "டைம்ஸ் ஆஃப் இந்தியா" நாளிதழ் தகவலொன்றை வெளியிட்டுள்ளது அதில் ஐசிசி நிர்வாகக் குழு உறுப்பினர் ஒருவர் "இப்போதுள்ள சூழ்நிலையில் போட்டிகளை காலி மைதானத்தில் நடத்த விருப்பமில்லை. அப்படி நடத்தினால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் வருவாய் கடுமையாகப் பாதிக்கப்படும். அதனால் இப்போதைக்கு டி20 உலகக் கோப்பையை நடத்தத் திட்டமில்லை. மே 28 ஆம் தேதி நடைபெறவுள்ள ஐசிசி நிர்வாகக் குழுக் கூட்டத்துக்குப் பின்பு அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும்" என்றார்.