விளையாட்டு

"என்னது ரோகித் சர்மா பெயர் லிஸ்ட்ல இல்லையா" ஷாக்கான வி. வி.எஸ்.லட்சுமண் !

"என்னது ரோகித் சர்மா பெயர் லிஸ்ட்ல இல்லையா" ஷாக்கான வி. வி.எஸ்.லட்சுமண் !

jagadeesh

கிரிக்கெட்டின் பைபிள் எனப்படும் விஸ்டன் கிரிக்கெட் புத்தகத்தில் ரோகித் சர்மாவின் பெயர் இடம் பெறாதது அதிர்ச்சியளிப்பதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

2019 - 2020 ஆம் ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீரர்கள் பட்டியலை விஸ்டன் வெளியிட்டுள்ளது. அதில் 5 கிரிக்கெட் வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள். அதில் முதல் இடத்தை இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இடம்பெற்றுள்ளார். மேலும் இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலிய மகளிர் அணியின் வீராங்கனை எல்சி பெர்ரி, இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ், ஆஸ்திரேலிய பேட்ஸ்மன் மார்னஸ் லபுஷானே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ஆனால் கடந்த ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பல சாதனைகளை புரிந்த இந்திய பேட்ஸ்மேன் ரோகித் சர்மா இடம் பெறவில்லை. இது குறித்து இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் விவிஎஸ் லட்சுமணன் கருத்து தெரிவித்துள்ளார் அதில் "சர்வதேச கிரிக்கெட்டை தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு ரோகித் சர்மாவின் பெயர் விஸ்டனில் இடம்பெறாதது, ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கும். ஆஷஸ் தொடர் மிகப்பெரியதுதான், ஆனால் அதைவிட உலகக் கோப்பை மிக முக்கியமானது" என்றார்.

மேலும் இது குறித்து கூறுகையில் " உலகக் கோப்பையில் 5 சதங்கள் அடித்தது சாதாரணமா விஷயமல்ல. அவரை தவிர உலகக் கோப்பையில் வேறு யாரும் இத்தனை ரன்களை எடுக்கவில்லை. அதுவும் தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் அடித்த சதம் அசாத்தியமானது. அத்தகைய வீரரின் பெயர் இடம்பெறாதது எனக்கு அதிர்ச்சியளிக்கிறது" என தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்துள்ளார் லட்சுமணன்.