விளையாட்டு

"பயிற்சியாளராக டிராவிட் தலைமை ஏற்றது ஆச்சரியமாக இருக்கிறது" - ரிக்கி பாண்டிங் ஓபன் டாக்

"பயிற்சியாளராக டிராவிட் தலைமை ஏற்றது ஆச்சரியமாக இருக்கிறது" - ரிக்கி பாண்டிங் ஓபன் டாக்

jagadeesh

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ராகுல் டிராவிட் ஏற்றது ஆச்சரியமளிக்கிறது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைந்தது. இதனையடுத்து தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ராகுல் டிராவிட் இப்போது ஏற்றுள்ளார். அவர் தலைமை ஏற்ற பின்பு நியூசிலாந்துடனான கிரிக்கெட் தொடரில் இந்தியா இப்போது விளையாடி வருகிறது. ஜெய்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியிலும் இந்தியா வெற்றிப் பெற்றது.

இது குறித்து பேசியுள்ள ரிக்கி பாண்டிங், "டிராவிட் இந்தப் பொறுப்பை ஏற்றது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவர் 19 வயதுக்குட்பட்டோர் அணிக்கு பயிற்சியாளராக இருந்தபோது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். எனக்கு அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தெரியாது. ஆனால் அவருக்கு சிறுவயது குழந்தைகள் இருப்பார்கள் என்றே நினைக்கிறேன். அதனால்தான் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றது எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. ஆனால் பயிற்சியாளர் பொறுப்புக்கு அவர் தகுதியானவர்" என்றார்.

மேலும் பேசிய அவர் "ஐபிஎல் தொடரின்போது தலைமைப் பொறுப்பை ஏற்க என்னிடமும் பிசிசிஐ தரப்பில் இருந்து அணுகினார்கள். மிகவும் அற்புதமாகவும் பேசினார்கள். ஆனால், நான் அவர்களிடம் என்னால் நிறைய நேரத்தை ஒதுக்க முடியாது. மேலும் ஐபிஎல்லில் கூட இனி பயிற்சியாளராக தொடர முடியாது என்பதை தெளிவாக கூறிவிட்டேன்" என்றார் ரிக்கி பாண்டிங்.