ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதனால் இந்தப்போட்டியை ஒளிபரப்ப தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி.
இந்நிலையில் அடுத்த 5 ஆண்டுகளில் ஐபிஎல் போட்டிகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் உரிமையை வழங்குவதற்கான ஏல நடைமுறைகளை ஆகஸ்ட் மாதம் 17-ம் தேதி முதல் தொடங்க, இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், பா.ஜ.க-வின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி, ஐபிஎல் தொடரை தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கான ஏலத்தை இணையம் மூலம் நடத்தவேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி சார்பில் ஆஜரான வக்கீல் பராக் திரிபாதி, ‘இந்திய கிரிக்கெட் வாரியம் கடைப்பிடித்து வரும் டெண்டர் முறை சிறப்பானதுதான்’ என்று தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ‘ஒளிபரப்பு உரிமம் தொடர்பாக தடை வழங்கவோ, அறிவுரை வழங்கவோ இது சரியான தருணம் இல்லை’ என்று மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.