விளையாட்டு

விராத் கோலி இயல்பு அதுதான்: மோர்கல் பேட்டி

விராத் கோலி இயல்பு அதுதான்: மோர்கல் பேட்டி

webteam

’விராத் கோலி ஆக்ரோஷமான போட்டியாளர். அவரது இயல்பு அதுதான்’ என்று தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர் மோர்னே மோர்கல் கூறினார்.

இந்திய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றது. செஞ்சுரியனில் நடைபெறும் போட்டியில் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 335 ரன்கள் எடுத்தது. மூன்றாவது நாளான நேற்று இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் 307 ரன்களில் முடிவுக்கு வந்தது. சிறப்பாக விளையாடி சதம் விளாசிய கேப்டன் விராத் கோலி 153 ரன்களில் ஆட்டமிழந்தார். வேகப்பந்துவீச்சாளார் மோர்னே மோர்கல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 2 விக்கெட் இழப்புக்கு 90 ரன்களை எடுத்திருந்தது. இதன்மூலம் அந்த அணி 118 ரன்கள் முன்னிலை பெற்றது. எல்கர் 36 ரன்களுடனும், டிவில்லியர்ஸ் 50 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் மோர்கல் நிருபர்களிடம் பேசிய போது, ’இந்த ஆடுகளத்தில் பலமுறை விளையாடி இருக்கிறேன். இதுபோன்ற பிட்ச்-சை நான் பார்த்ததில்லை. இதுவரை நான் பந்துவீசியதிலேயே இதுதான் கடினமாக இருந்தது. இரண்டாம் நாளில் இன்னிங்ஸை, ஸ்பின்னரை கொண்டு தொடங்கும் நிலை தென்னாப்பிரிக்காவில் நான் கேள்விபடாத ஒன்று. இந்த பிட்ச் இந்தியாவில் இருப்பது போல இருக்கிறது. இப்படிபட்ட பிட்ச்-சில் அதிக ரன்கள் குவிப்பதும் விக்கெட்டை வீழ்த்துவதும் கடினமானது. இதன் மூலம் நல்ல அனுபவங்கள் கிடைத்தன. இந்த டெஸ்ட் போட்டியும் கடினமான ஒன்றாகத்தான் இருக்கும். இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 250 ரன்கள் எடுத்தாலே அது நல்ல ஸ்கோராகத்தான் இருக்கும். விராத் கோலி பற்றி கேட்கிறார்கள். அவர் சிறந்த வீரர். சரியான போட்டியாளர். ஆக்ரோஷமான வீரர். அதுதான் அவரது இயல்பு. அவர் தலைமையில், தென்னாப்பிரிக்காவில் தொடரை வெல்லக் கூடிய திறமையான அணியை இந்தியா கொண்டிருக்கிறது’ என்றார்.