விளையாட்டு

ஜேசன் ராய், கேன் வில்லியம்சன் பொறுப்பான ஆட்டம் - ஆர்சிபிக்கு 142 ரன்கள் இலக்கு!

கலிலுல்லா

ஆர்சிபி அணிக்கு 142 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஹைதராபாத் அணி.

அமீரகத்தில் இன்று நடைபெற இருக்கும் லீக் போட்டியில் பெங்களூர் - ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி, ஹைதராபாத் அணிக்கு அபிஷேக் ஷர்மா, ஜேசன் ராய் இணை துவக்கம் கொடுத்தது. வந்த வேகத்தில் பவுண்டரி, சிக்ஸ் என விளாசிய அபிஷேக் ஷர்மா 10 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து கேட்ச் கொடுத்துவிட்டு பெவிலியன் திரும்பினார். அடுத்தாக வந்த கேன் வில்லியம்சன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த 11 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்களை சேர்த்திருந்தது.

11 ஓவரில் ஹர்ஷல் படேல் பந்து கேன் வில்லியம்சனை கடந்து ஸ்டம்பை பதம் பார்த்ததும், நடையை கட்டினார் வில்லியம்சன். அடுத்தாக வந்த ப்ரியம் கார்க் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. மறுபுறம் நங்கூரமிட்ட ஜேசன் ராயும் வெளியேற 15 வது ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு ஹைதராபாத் அணி 107ரன்களை சேர்த்திருந்தது. அடுத்தடுத்து களத்துக்கு வந்த வீரர்கள் பெரிய அளவில் சோபிக்காததால் 20 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் சேர்த்தது. பெங்களூரு அணி தரப்பில் அதிகபட்சமாக ஹர்ஷத் படேல் 3 விக்கெட்டுகளையும், டேனில் கிறிஸ்டியன் 2 விக்கெட்டுகளையும், சாஹல், ஜார்ஜ் கார்டன் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.