விளையாட்டு

கார்க், பூரான், திரிபாதி அதிரடியில் ரைஸ் ஆன ஹைதராபாத் அணி - மும்பைக்கு 194 ரன் இலக்கு

கார்க், பூரான், திரிபாதி அதிரடியில் ரைஸ் ஆன ஹைதராபாத் அணி - மும்பைக்கு 194 ரன் இலக்கு

ச. முத்துகிருஷ்ணன்

பிரியம் கார்க், நிக்கோலஸ் பூரான், ராகுல் திரிபாதி ஆகியோரின் அபார ஆட்டத்தால் மும்பைக்கு எதிராக 193 ரன்களை குவித்தது சன்ரைசர்ஸ் அணி!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் 65-வது லீக் ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதி வருகின்றன. டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் ஷர்மா பவுலிங்கை தேர்வு செய்தார். சன் ரைசர்ஸ் அணியின் ஓப்பனர்களாக அபிஷேக் ஷர்மா, பிரியம் கார்க் ஆகியோர் களமிறங்கினர்.

டேனியல் சாம்ஸ் வீசிய முதல் ஓவரிலேயே பவுண்டரி விளாசி அதிரடியாக ஆட்டத்தை துவக்கினார் பிரியம் கார்க். மெரிடித் வீசிய 2வது ஓவரில் அபிஷேக் பவுண்டரி விளாச ஆட்டம் சூடுபிடிக்க துவங்கியது. ஆனால் சூட்டோடு சூடாக டேனியல் சாம்ஸ் ஓவரில் சிக்கி அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார் அபிஷேக் ஷர்மா. அடுத்து வந்த ராகுல் திரிபாதியும் அதிரடியாக விளையாடத் துவங்க, ஸ்கோர் ஜெட் வேகத்தில் எகிறத் துவங்கியது.

சஞ்சய் யாதவ் வீசிய 4வது ஓவரில் 2 பவுண்டரிகளை சிதறடித்த திரிபாதி அடுத்து பும்ரா வீசிய ஓவரிலும் சிக்ஸர் மற்றும் தொடர்ச்சியாக 2 பவுண்டரிகளை விளாசி அதகளம் செய்தார். டேனியல் சாம்ஸ் வீசிய பந்தில் பிரியம் கார்க் கொடுத்த கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார் சஞ்சய் யாதவ். அடுத்து மீண்டும் சிக்ஸர் விளாசி கேட்ச் தவற விட்டதன் விளைவை உணர்த்தினார் கார்க். பவர்பிளே முடிவில் 57-1 என்ற நிலையில் மிக வலுவான நிலையில் இருந்தது சன் ரைசர்ஸ்.

அடுத்து சஞ்சய் யாதவ், மயங்க் மார்கண்டே வீசிய ஓவரில் திரிபாதி - கார்க் கூட்டணி பவுண்டரிகளாக விளாசி அசத்தியது. 42 ரன்கள் எடுத்த நிலையில் ரமந்தீப் சிங் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார் பிரியம் கார்க். அடுத்து வந்த பூரானும் பவுண்டரிகளாக விளாசி அதிரடியாக விளையாடத் துவங்கினார். மெரிடித் வீசிய ஓவரில் தொடர்ச்சியாக 2 சிக்ஸர்களாக விளாசி வான வேடிக்கை காட்டினார் பூரான்.

மயங்க் மார்கண்டே வீசிய ஓவரில் பவுண்டரி, சிக்ஸர்களாக விளாசி பூரான் அசத்த, மறுபக்கம் 32 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார் ராகுல் திரிபாதி. அதன்பின் டேனியல் சாம்ஸ் வீசிய ஓவரில் 2 சிக்ஸர், 1 பவுண்டரிகளை விளாசி அசத்தினார் திரிபாதி. ஆனால் 38 ரன்கள் எடுத்த நிலையில் பூரான் தன் விக்கெட்டை மெரிடித் ஓவரில் பறிகொடுத்தார். அவரை பின் தொடர்ந்து திரிபாதியும் 76 ரன்கள் எடுத்த நிலையில் நடையைக் கட்டினார். அடுத்து வந்த மார்க்ரம் 2 ரன்னில் அவுட்டாக, மிக முக்கிய டெத் ஓவர்களில் நெருக்கடிக்கு ஆளானது சன் ரைசர்ஸ்.

இக்கட்டான சூழலில் இணை சேர்ந்த கேன் வில்லியன்சன், வாஷிங்டன் சுந்தர் இருவரும் பொறுப்புடன் விளையாடினர். பும்ரா வீசிய கடைசி பந்தில் சுந்தர் க்ளீன் போட்டானதால், 20 ஓவர்கள் முடிவில் சன் ரைசர்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்களைக் குவித்தது. தற்போது 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கி விளையாடி வருகிறது மும்பை இந்தியன்ஸ்.