விளையாட்டு

சஞ்சு சாம்சனின் சீரற்ற ஆட்டத்திற்கு இதுதான் காரணம்! - சொல்கிறார் சுனில் கவாஸ்கர்

சஞ்சு சாம்சனின் சீரற்ற ஆட்டத்திற்கு இதுதான் காரணம்! - சொல்கிறார் சுனில் கவாஸ்கர்

ச. முத்துகிருஷ்ணன்

வெகு நாட்களுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெற்றுள்ள நிலையில், அவரது சீரற்ற ஆட்டத்திற்கான காரணம் குறித்து பேசியுள்ள சுனில் கவாஸ்கர், அவர் சிறப்பாக விளையாடுவதற்கான வழி குறித்தும் கூறியுள்ளார்.

வெகு நாட்களுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியில் தனது இடத்தை உறுதிப்படுத்த சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இம்மாத இறுதியில் நடைபெற உள்ள அயர்லாந்துக்கு எதிராக இரண்டு டி20 போட்டிகளில் விளையாடும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியில் அவர் இடம்பெற்றுள்ளார். ரிஷப் பந்த், இஷான் கிஷான், மற்றும் அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக் போன்ற பல விக்கெட் கீப்பர்-பேட்டர்கள் 27 வயதான சஞ்சு சாம்சனை விட மிகவும் நிலைத்தன்மையுடன் சிறப்பாக விளையாடுவதால், டி20 உலகக் கோப்பையில் சாம்சனை சேர்ப்பது கடினமான பணியாக இருக்கும்.

சாம்சன் ஆட்டம் சிறப்பானதாக பல சமயங்களில் அமைந்தபோதிலும் அவை சீரற்ற முறையில் வந்ததே இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்காமல் போக முக்கியக் காரணம். இதுவரை சஞ்சு சாம்சன் இந்தியாவுக்காக ஒரு ஒருநாள் மற்றும் 13 டி20 போட்டிகளில் முறையே 46 மற்றும் 174 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், சாம்சனின் திறமைகளில் நம்பிக்கை கொண்டுள்ளார், ஆனால் அவர் தனது ஷாட் தேர்வை மேம்படுத்த வேண்டும் என்று கருதுகிறார்.

“எல்லோரும் அதிக வாய்ப்புக்கு தகுதியானவர்கள், ஆனால் நீங்கள் வாய்ப்புகளை அதிகம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சஞ்சு சாம்சனை வீழ்த்தியது என்னவெனில், இந்தியாவுக்காக விளையாடும் போது அவரது ஷாட் தேர்வுதான். அவருக்கு இருக்கும் அபார திறமை நம் அனைவருக்கும் தெரியும். அவர் முதல் பந்தில் இருந்து அதிரடியாக ஆட பார்க்கிறார். சிறப்பாக முதல் ஷாட்டை ஆடி விடுகிறார். ஆனால் அடுத்த பந்திலேயே மோசமான ஷாட் ஒன்றை ஆடி வெளியேறி விடுகிறார்.” என்று சுனில் கவாஸ்கர் கூறினார்.

“எனவே, அவரது ஷாட் தேர்வு சிறப்பாக இருந்தால், அது இந்தியாவுக்காக இருந்தாலும் அல்லது அவரது ஐபிஎல் அணிக்காக இருந்தாலும் அவர் மிகவும் சீரானவராக இருப்பார். அப்போது அணியில் அவரது இடம் குறித்து யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள்.” என்று கூறினார் கவாஸ்கர்.