விளையாட்டு

கிரிக்கெட் வீரரின் மனைவியை குறிப்பிட்டு கமெண்ட்ரி: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கவாஸ்கர்

கிரிக்கெட் வீரரின் மனைவியை குறிப்பிட்டு கமெண்ட்ரி: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கவாஸ்கர்

JustinDurai

ராஜஸ்தான் - சென்னை அணிகளுக்கிடையிலான ஆட்டத்தில் சுனில் கவாஸ்கர் பிரயோகித்த வர்ணனை ஒன்று சர்ச்சையாகி உள்ளது.

வெஸ்ட் இண்டீசை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேனான ஷிம்ரோன் ஹெட்மயர், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 12 ஆட்டங்களில் 297 ரன்கள் சேர்த்துள்ள அவர் அந்த அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றியுள்ளார். இதனிடையே நிறைமாத கர்ப்பிணியாக உள்ள தனது மனைவி நிவானிக்கு குழந்தை பிறந்ததால் ஹெட்மயர் தாயகம் சென்றுவிட்டு இந்தியா திரும்பினார். இதனால் ஹெட்மயர் இரு லீக் ஆட்டங்களில் விளையாடவில்லை. இதனைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற சிஎஸ்கே அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியில் அவர் இணைந்தார். இந்த போட்டியில் ஹெட்மையர் 6 ரன்கள்  மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

முன்னதாக அவர் களத்தில் இருந்தபோது, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் அவரை வர்ணனை செய்த விதம்தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ''ஹெட்மையரின் மனைவிக்கு இப்போது தான் டெலிவரி ஆனது. அவர் மனைவி டெலிவரி செய்துவிட்டார்; ஹெட்மையர் பேட்டிங்கில் டெலிவரி செய்வாரா? என்று பார்க்கலாம்'' என்று கவாஸ்கர் கமெண்டரி செய்தார்.

சுனில் கவாஸ்கரின் இந்த கமெண்டரிக்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு முன்னாள் வீரரான நீங்கள் இதுபோன்ற தரக்குறைவான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என்றும் நிதானமாக பேசுங்கள் என்றும் பலர் அவரை வசைபாடி வருகின்றனர்.

கவாஸ்கர் இதற்கு முன்பு, விராட் கோலி சரியாக விளையாடாததற்கு காரணமாக அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவை குறிப்பிட்டு இரட்டை அர்த்தத்தில் ஓர் கருத்து கூறியிருந்தார். அப்போதும் கவாஸ்கரின்  கருத்து கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.

இதையும் படிக்கலாம்: கடைசி போட்டியிலும் சென்னை தோல்வி - பலவீனங்கள் அத்தனையும் அம்பலப்படட்டும்!