விளையாட்டு

'சுல்தான் ஆஃப் ஸ்விங்'... பேட்ஸ்மேன்களை பதற வைத்த வாசிம் அக்ரம் பிறந்தநாள் இன்று!

'சுல்தான் ஆஃப் ஸ்விங்'... பேட்ஸ்மேன்களை பதற வைத்த வாசிம் அக்ரம் பிறந்தநாள் இன்று!

jagadeesh

பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றை இவரின் பெயர் இல்லாமல் எழுதிட முடியாது. சர்வதேச கிரிக்கெட்டில் 916 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் இவர். டெஸ்ட், ஒரு நாள் என இரு போட்டிகளிலும் தலா 400 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய இரு வீரர்களில் இவரும் ஒருவர். அதுவுமம் ஒருநாள் போட்டிகளில் 502 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையும் இவருக்கு உண்டு. இன்னமும் இந்தச் சாதனையை எந்த வேகப்பந்துவீச்சாளராலும் எட்டக் கூட முடியவில்லை.

உலகளவில் பேட்டிங்க்கு இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் எப்படியோ, அப்படிதான் உலகளவில் வேகப்பந்துவீச்சுக்கு ஒரு ஜாம்பவான் என்றால் ‘சுல்தான் ஆஃப் ஸ்விங்’ என்று புகழப்பட்ட பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் இன்று தனது 55 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 1985 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான வாசிம் அக்ரம், 1990 களில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக உலக பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தார். 'லாங் ரன் அப்' கிடையாது, 100 கிலோ மீட்டர் வேகத்தில் பந்தை வீசமாட்டார்.

ஆனால் "ஷார்ட் ரன் அப்", தேவையான வேகம், இன் ஸ்விங், அவுட் ஸ்விங், ரிவர்ஸ் ஸ்விங், யார்கர், பவுன்சர் என அனைத்தும் அறிந்த ஒரு முழுமையான வேகப்பந்துவீச்சாளராக கொடிகட்டி பறந்தார் வாசிம் அக்ரம். மிக முக்கியமாக 1992 ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி உலகக் கோப்பை வென்றதற்கு அக்ரமும் ஒரு முக்கியமான காரணம். ஆம் 1992 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக கடைசி கட்டத்தில் வாசிம் அக்ரம் எடுத்த 33 ரன்களும், பந்துவீச்சில் அவர் வீழ்த்திய 3 விக்கெட்டுகளும் பாகிஸ்தான் கோப்பை வெல்லக் காரணமானது. இறுதிப் போட்டியில் வாசிம் அக்ரம் ஆட்ட நாயகன் விருது பெற்றதே அதற்கு உதாரணம்.

சர்வதேசப் போட்டிகளில் 4 முறை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியவர் அக்ரம். டெஸ்ட், ஒரு நாள் போட்டியில் தலா இரு முறை இந்தச் சாதனையைச் செய்தவர் அக்ரம். 1989, 1990-ம் ஆண்டுகளில் ஷார்ஜாவில் நடந்த ஒரு நாள் போட்டிகளில் இரு முறையும்; 1999-ம் ஆண்டில் இலங்கைக்கு எதிரான அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் இரு முறையும் ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்தினார். சர்வதேச அளவில் இடக்கை வேகப்பந்துவீச்சாள்ரகளில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் இவர் மட்டுமே. இந்தச் சாதனையை இனி எவரேனும் நெருங்குவார்களா என கூட தெரியவில்லை.

அதேபோல பாகிஸ்தான் அணிக்கு பேட்டிங்கிலும் கைகொடுத்திருக்கிறார் வாசிம் அக்ரம். டெஸ்ட் கிரிக்கெட்டில் 8-வது பேட்ஸ்மேனாக களமிறங்கி அதிக ரன் குவித்த வீரர் என்ற சிறப்பைப் பெற்றவர் அக்ரம். 1996-ல் ஷேக்புராவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 8-வதாக களமிறங்கி 257 ரன்கள் குவித்து அவுட் ஆகாமல் இருந்தார் அக்ரம். 22 பவுண்டரிகள், 12 சிக்ஸர்களை விளாசினார். இந்தப் போட்டிக்கு முன்பு பாகிஸ்தான் அணியை பல முறை தனது பேட்டிங்காலும் காப்பாற்றியிருக்கிறார் வாசிம் அக்ரம்.

அதேபோல தனக்கு நிகழ்ந்த சோதனையையும் சாதனையாக்கியவர் வாசிம் அக்ரம். புகழின் உச்சியில் இருந்த வாசிம் அக்ரமுக்கு இளம் வயதிலேயே நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்பட்டது. 1997- ம் ஆண்டு பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்தபோது, அவருக்கு நீரிழிவு நோய் இருப்பது தெரியவந்தது. அப்போது, வாசிமுக்கு 29 வயதே ஆகியிருந்தது. ஆனால் 36 வயது வரை நீரிழிவு பாதிப்பிலும் தொடர்ந்து விளையாடினார். மைதானத்தில் சில நேரங்களில் சர்க்கரையின் அளவு குறைந்தால் மயக்கம் வரும். அப்போது சாக்லேட்டுகளை சுவைத்துக் கொண்டே விக்கெட்டையும் வீழ்த்திய சாதனையாளர் அக்ரம்.

சொந்த வாழ்க்கையில் சோகமாக 2009 இல் தன் மனைவியை இழந்தார் அக்ரம். செப்ஸிஸ் என்ற அரிய வகையான நோயால் பாதிக்கப்பட்ட அக்ரமின் மனைவி ஹூமா சிகிச்சைக்காக சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் பின்பு அக்ரம் 2013 இல் மறுமணம் செய்துக்கொண்டார். வாசிம் அக்ரம் தனது கிரிக்கெட் வாழ்க்கையை 2003 உலகக் கோப்பைக்கு பின்பு முடித்துக்கொண்டார். அதன் பின்பு பயிற்சியாளர், வர்ணனையாளர் என தொடர்ந்து பயணிக்கிறார். ஆனாலும் ரசிகர்களுக்கு அக்ரமின் அந்த "இன்ஸிவிங் கிங் யார்க்கர்கள்" இன்னும் கண்களை விட்டு அகலாமல் இருக்கிறது.