விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய உச்சங்களைத் தொட்ட ஸ்மித்

டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய உச்சங்களைத் தொட்ட ஸ்மித்

rajakannan

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 2017-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் பல்வேறு புதிய சாதனைகளை படைத்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்று பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது. மெல்போர்னில் நடைபெற்று வந்த 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிவடைந்தது. கேப்டன் ஸ்மித் இந்தப் போட்டியிலும் ஆட்டமிழக்காமல் 102 ரன்கள் எடுத்தார். இது அவருக்கு டெஸ்ட் போட்டியில் 23-வது சதம் ஆகும். இந்தச் சதத்தின் மூலம் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில் தொடர்ச்சியாக ஸ்மித் 4 சதம் அடித்துள்ளார். இதற்கு முன் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் பிராட்மேன் தான் இந்தச் சாதனையை நிகழ்த்தி இருந்தார். அவருடன் ஸ்மித் தற்போது இணைந்துள்ளார். 4 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், ஸ்மித் இதுவரை 602(141, 40, 6, 239, 76, 102) ரன்கள் குவித்துள்ளார்.

2017-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் 1,305 ரன்கள் குவித்து ஸ்மித் முதலிடத்தில் உள்ளார். சராசரி 76.76 ரன்கள் ஆகும். தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகள் ஸ்மித் ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்து உள்ளார். இதற்கு முன்பு மேத்யூ ஹைடன் மட்டுமே இந்தச் சாதனையை நிகழ்த்தி இருந்தார். இருப்பினும் 70-க்கும் சராசரி உள்ளது ஸ்மித்துக்கு மட்டும்தான். 

2014 - 1,146(81.85)
2015 - 1,474(73.70)
2016 - 1,079(71.93)
2017 - 1,305(76.76)

மேலும், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ரிக்கி பாண்டிங் மட்டுமே ஒரே ஆண்டில் 6 சதங்கள் எடுத்து இருந்தார். தற்போது பாண்டிங் உடன் ஸ்மித் இணைந்துள்ளார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 22 சதங்கள் எடுத்த 3-வது வீரர்கள் என்ற சாதனையை படைத்துள்ளார். இதன் மூலம் 4-வது இடத்தில் இருந்த சச்சின் டெண்டுல்கரை பின்னுக்கு தள்ளி முன்னேறினார். 

டான் பிராட்மேன் - 59 இன்னிங்ஸ்
சுனில் கவாஸ்கர் - 109 இன்னிங்ஸ்
ஸ்டீவ் ஸ்மித்    - 110 இன்னிங்ஸ்
முகமது யூசுப்    - 122 இன்னிங்ஸ்
சச்சின்           - 123 இன்னிங்ஸ்

49 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்மித் 22 இன்னிங்ஸ்களுக்கு பிறகுதான் முதல் சதத்தை அடித்து இருந்தார். முதல் 11 டெஸ்ட் போட்டிகளில் வெறும் 698 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். சராசரி 33.23 ஆகும். தற்போது, 49 டெஸ்ட்களில் 23 சதங்கள் அடித்துள்ளார். சராசரி 76.93 ஆகும்.