விளையாட்டு

இன்றோடு முடிகிறது ஸ்மித், வார்னர் மீதான தடை!

இன்றோடு முடிகிறது ஸ்மித், வார்னர் மீதான தடை!

webteam

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தடை, இன்றோடு முடிகிறது.

ஆஸ்திரேலிய அணி, கடந்த ஆண்டு மார்ச் மாதம் தென்னாப்பிரிக்கா சென்று கிரிக்கெட் விளையாடியது. மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது, ஆஸ்திரேலிய வீரர் பேன்கிராஃப்ட் மஞ்சள் நிற டேப்பைப் பயன்படுத்தி பந்தை சேதப்படுத்தியதாகப் புகார் எழுந்தது. டிவி கேமராவிலும் தெளிவாகத் தெரிந்தது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் பேன்கிராஃப்ட் தவறை ஒப்புக்கொண்டார்.

இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டன் டேவிட் வார்னர் மூளையாக செயல்பட்டதாகவும், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஆதரவாகச் செயல்பட்டதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து வார்னர், ஸ்மித்துக்கு தலா ஒரு வருடமும் பேன்கிராஃப்ட்டுக்கு 9 மாதமும் தடை விதித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது.இருந்தாலும் உள்ளூர் போட்டிகளில் விளையாட அனுமதியளித்தது.

இந்த தடை காரணமாக, கடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் அவர்களை ஐபிஎல் நிர்வாகம் அழைக்கவில்லை. இந்த வருட ஐபிஎல் போட்டி யில் ஸ்மித்தும் வார்னரும் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் பேன்கிராஃப்ட்டின் தண்டனை காலம் ஏற்கனவே முடிந்த நிலையில், ஸ்மித், வார்னரின் தண்டனை காலம் இன்றோடு முடிகிறது. 

மே மாதம் தொடங்கும் உலகக் கோப்பைப் போட்டிக்கு, அவர்கள் ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்படுவார்கள் என்று தெரிகிறது.