இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நியூசிலாந்து அணி, அவ்வணியுடன் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. அந்த வகையில் இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியை இலங்கை அணி வென்றிருந்தது. இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையே 2வது டெஸ்ட் போட்டி, காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல்நாளில் 5 விக்கெட்டுகளை இழந்து 602 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 182 ரன்களும், சண்டிமால் 116 ரன்களும், குசல் மெண்டிஸ் 106 ரன்களும் அடித்தனர். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 2-வது நாள் முடிவில் 22 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்துள்ள நிலையில், மழை காரணமாக 2வது நாள் ஆட்டம் நிறைவுற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வில்லியம்சன் 6 ரன்களுடனும், அஜாஸ் படேல் ரன் எதுவுமின்றியும் களத்தில் உள்ள நிலையில், நாளை 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
முன்னதாக இந்த ஆட்டத்தில் கமிந்து மெண்டிஸ் 182 ரன்கள் குவித்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 ரன்களை கடந்துள்ளார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை கடந்த ஆசிய வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னர் இந்தியாவின் வினோத் காம்ப்ளி 14 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை கடந்ததே சாதனையாக இருந்தது. தற்போது 13 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை கடந்துள்ள கமிந்து புதிய சாதனை படைத்துள்ளார்.
மேலும் டெஸ்ட் வரலாற்றில் குறைந்த இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை கடந்த வீரர்களின் சாதனை பட்டியலில் 2-வது இடத்தில் இருந்த டான் பிராட்மேனை சமன் செய்துள்ளார். இருவரும் 13 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை செய்துள்ளனர். இந்த பட்டியலில் முதலிடத்தில் ஹெர்பர்ட் சட்க்ளிப் மற்றும் எவர்டன் வீக்ஸ் இருவரும் 12 இன்னிங்ஸ்களில் தலா 1000 ரன்களை கடந்ததே சாதனையாக உள்ளது.
மேலும், கமிந்து தாம் விளையாடிய 8 போட்டிகளிலேயே இத்தகைய சாதனையை செய்துள்ளார். இந்தப் பட்டியலில் டான் பிராட்மேன் முதல் இடத்தில் உள்ளார். அவர், 7 போட்டிகளிலேயே ஆயிரம் ரன்களைக் குவித்துள்ளார். அடுத்து, கமிந்து மெண்டிஸ் தாம் விளையாடிய 8 டெஸ்ட் போட்டிகளிலும் தொடர்ச்சியாக 50+ ஸ்கோரை எடுத்த முதல் பேட்டர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அவரது முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்கள்: 61, 102, 92*, 12, 74, 64, 114, மற்றும் 182*.