இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் 3 மாதங்களுக்குள் உடல் தகுதி பெற வேண்டும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
அதற்குள் உடல் தகுதியை எட்டஇயலாத வீரர்கள், அணியை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ஜெயசேகரா எச்சரிக்கை விடுத்துள்ளார். விரைவில் தொடங்க உள்ள ஜிம்பாப்வே அணிக்கெதிரான தொடரில் பங்கேற்க உள்ள இலங்கை அணி வீரர்கள் பெரும்பாலானவர்கள் உடற்தகுதியுடன் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்நாட்டு விளையாட்டுத் துறை அமைச்சர், ஜெயசேகரா இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் மோசமான பீல்டிங்கைத் தொடர்ந்து, வீரர்களின் உடல் தகுதி குறித்து சோதனை நடத்தப்படும் என அமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்தார். வீரர்களின் தேர்வில் அரசு தலையிடாது , எனினும் தேசத்தின் சார்பில் போட்டிகளில் பங்கேற்பவர்கள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி ஒப்புதலுக்கு பிறகே அனுமதிக்கப்படுவர் என்றும் ஜெயசேகரா தெரிவித்துள்ளார்.