இலங்கை கிரிக்கெட்டின் ஆலோசகராக இணைந்து பணியாற்ற வருமாறு அமைச்சர் விடுத்த கோரிக்கையை, முத்தையா முரளிதரன் நிராகரித் துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் வாரிய ஆலோசகர்களாக இணைந்து பணியாற்ற, அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன்கள் அரவிந்த டி சில்வா, சங்க காரா, மஹேல ஜெயவர்த்தனே, முத்தையா முரளிதரன், ரோஷன் மஹானம ஆகியோருக்கு விளையாட்டு அமைச்சர் ஃபைஸர் முஸ்தபா கோரிக்கை விடுத்திருந்தார்.
இதை மஹேலா ஜெயவர்த்தனே நிராகரித்து பதிவிட்டார். அதில், ’நான் ஒரு வருடம் இலங்கை கிரிக்கெட் கமிட்டியிலும் ஆறு மாதம் சிறப்பு ஆலோசனைக் குழுவிலும் இருந்தேன். நான் சொன்ன எந்த பரிந்துரையும் ஏற்கப்படவில்லை. இந்த கிரிக்கெட் அமைப்பு மீது எனக்கு எந்த நம்பிக் கையும் இல்லை’ என்று காட்டமாக கூறியிருந்தார்.
இந்நிலையில் முத்தையா முரளிதரன் இலங்கை அமைச்சருக்கு நேற்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.
‘அணி வெற்றி பெற்றுக்கொண்டிருக்கும்போது முன்னாள் வீரர்களை கலந்து ஆலோசிக்காமல், மோசமான நிலையில் இருக்கும்போது இப்படி அழைப்பது வருந்தத்தக்கது என்றும் இது நேர்மையற்ற, தந்திரமான நடவடிக்கை என்று கருதுவதாக தெரிவித்துள்ளார். இங்கு பொறுப்பில் இருந்த மஹேலா ஜெயவர்த்தனே, தனது அனுபவத்தின் அடிப்படையில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று கூறியுள்ளார். அதை அடிப்படையாக வைத்து தானும் நிராகரிப்பதாக முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.