உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 87 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் இன்று மோதின. இதில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியில் வார்னர், கேடன் ஆரோன் பின்ச் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். வார்னர் 26 ரன்னில் ஆட்டமிழந்தார்.
பின்ச் தொடக்கம் முதலே நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தார். கவாஜா 10 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்ச் உடன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இருவரும் அடித்து விளையாடினர். ஆஸ்திரேலிய அணியின் ரன் வேகம் உயர்ந்தது. 97 பந்துகளில் சதம் விளாசிய பின்ச், பின்னர் அதிரடி காட்டினார். அவர் 132 பந்துகளில் 153 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து 73 ரன்களுடன் ஸ்மித் அவுட் ஆனார்.
மார்ஷ் 3, கேரே 4, கம்மிங்ஸ் 0 என அடுத்தடுத்து விக்கெட்டுகள் போனது. மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 335 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்கோடு இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்கரர்களாக களமிறங்கிய கருணாரத்னேவும் பெரேராவும் அதிரடியாக ஆடி ஆட்டத்தை தொடங்கி வைத்தனர். கருணாரத்னே 97 ரன்னிலும் பெரேரா 36 பந்துகளுக்கு 52 ரன்களும் எடுத்து அவுட்டாகினர்.
இதையடுத்து அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் ஆஸ்திரேலிய பந்துவீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியவில்லை. தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 45.5 ஓவரில் 247 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது இலங்கை அணி. இதனால் 87 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி இலங்கையை தோற்கடித்தது.