விளையாட்டு

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாட வேண்டும் - மலிங்கா

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாட வேண்டும் - மலிங்கா

webteam

இந்திய அணி வீரர் மகேந்திர சிங் தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடவேண்டும் என்று இலங்கை பந்துவீச்சாளர் லசித் மலிங்கா தெரிவித்துள்ளார். 

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் நாளை இலங்கை அணிக்கு எதிராக விளையாடவுள்ளது. இந்திய அணி ஏற்கெனவே அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. எனவே நாளைய போட்டி இந்திய அணிக்கு ஒரு பயிற்சி போட்டியாகவே அமையும். நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய வீரர் தோனியின் செயல்பாடு சற்று விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. அத்துடன் அவர் இந்தத் தொடரின் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவார் என தகவல்கள் வெளியாகிவருகின்றன.

இந்நிலையில் இலங்கை அணியின் முன்னணி பந்துவீச்சாளர் லசித் மலிங்கா தோனி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், “என்னை பொருத்தவரை தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடவேண்டும். ஏனென்றால் கடந்த 10 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் இவர்தான் சிறந்த ஃபினிஷராக இருந்து வருகிறார்.

அவருடைய அனுபவம் அணிக்கு முக்கியமான தருணங்களில் கைக்கொடுக்கும். எனவே தான் இந்திய அணி சிறந்த அணியாக விளங்கி வருகிறது. இந்தத் தொடரில் இந்திய அணி எந்த அணியையும் தோற்கடிக்கும் திறன் கொண்ட அணியாகவுள்ளது. ஆகவே தோனி இன்னும் ஒரிரு ஆண்டுகள் அணியில் விளையாடி இளம் வீரர்களுக்கு இக்கட்டான சூழ்நிலையை கையாள்வது குறித்து கற்று தரவேண்டும்.

மேலும் இந்திய அணியில் தற்போது உள்ள வேகப்பந்து வீச்சாளர்களில் பும்ரா மற்றும் ஷமி ஆகியோர் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர். இவர்களில் பும்ரா கடைசி பத்து ஓவர்களில் மிகவும் சிறப்பாக பந்துவீசி வருகிறார். அத்துடன் அவர் இக்கட்டான சூழ்நிலையை எளிதாக சமாளித்து பந்துவீசும் திறன் பெற்றுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.