விளையாட்டு

நாங்க ரெடி.. நீங்க ரெடியா? - ஐபிஎல் குறித்து பேசிய இலங்கை!!

நாங்க ரெடி.. நீங்க ரெடியா? - ஐபிஎல் குறித்து பேசிய இலங்கை!!

webteam

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததையடுத்து மார்ச் 29-ஆம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் போட்டிகள் ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்பு, இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட காரணத்தால் திட்டமிட்டப்படி ஐபிஎல் போட்டிகள் நடைபெறவில்லை.

மேலும் ஐபிஎல் போட்டிகள் செப்டம்பரில் நடத்தப்படலாம், வெளிநாடுகளில் நடக்கலாம் என்ற செய்திகள் வெளியாகின. இதனையடுத்து ஐபிஎல் போட்டிகளின் நிலை குறித்து பிசிசிஐ முக்கியமான அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது.

இது குறித்து தெரிவித்த பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா "நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாலும், ஊரடங்கு உத்தரவு அரசால் செயல்படுத்தப்பட்டு வருவதாலும், அடுத்த அறிவிப்பு வரும் வரை 2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்படுகின்றன. கிரிக்கெட் போட்டியை விட தேசத்தின் பாதுகாப்பும் நலனே முக்கியம் என்பதால் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அணிகளின் நிர்வாகத்தினர் இத்தகைய முடிவை எடுத்துள்ளோம்" என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இலங்கையில் ஐபிஎல் போட்டிகள் நடத்த தயாராக இருக்கிறோம் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு பேசிய இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஷமி சில்வா, கொரோனா அச்சுறுத்தலில் இருந்து இந்தியாவிற்கு முன்னதாகவே இலங்கை மீண்டுவிடும். எனவே இங்கு கிரிக்கெட் போட்டிகளை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் எழுத உள்ளோம் என தெரிவித்துள்ளார்.