விளையாட்டு

எஸ்கேப் ஆகிவிட்டார் தோனி: இலங்கை கோச் புலம்பல்

webteam

தோனி, அவுட் கண்டத்தில் இருந்து தப்பியதுதான் தோல்விக்கு காரணம் என்று இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் நிக் போதாஸ் கூறியுள்ளார்.

இலங்கை அணியுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி போராடி வென்றது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இந்திய அணியின், ரோகித், கேதர் ஜாதவ், கேப்டன் கோலி, ராகுல், ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் படேல் ஆகியோர் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தினார் அகிலா தனஞ்செயா. இதனால் இலங்கை அணி எளிதில் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 8-வது விக்கெட்டுக்கு இணைந்த தோனியும், புவேனேஷ்வர் குமாரும் பொறுப்பாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு திருப்பினர்.

தோனி 29 ரன்னில் இருந்த போது பெர்னாண்டோ வீசிய பந்து அவர் கால்களுக்கு இடையே சென்று ஸ்டம்பை மெதுவாகப் பதம்பார்த்தது. ஆனால், பெயில்ஸ் கீழே விழவில்லை. அதனால் அவுட் கண்டத்தில் இருந்து தப்பினார் தோனி. அப்போது அவர் அவுட்டாகியிருந்தால் இலங்கை அணி வென்றிருக்கும். 

இதைக் குறிப்பிட்டு பேசியுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் நிக் போதாஸ், ’இந்தப் போட்டி வெறுப்பேற்றிவிட்டது. தோனி அவுட் ஆகியிருக்க வேண்டும். இந்தப் போட்டியில் வெற்றி கைக்கு அருகில் வந்து சென்றிருக்கிறது. இப்படி விட்டிருக்கக் கூடாது. இருந்தாலும் இந்தப் போட்டியில் தனஞ்செயா சிறப்பாக பந்துவீசினார். ஆறு விக்கெட்டை அவர் எடுத்தது, மிகவும் மகிழ்ச்சியான ஒன்று’ என்று கூறியுள்ளார்.