விளையாட்டு

அசத்தும் பேட்டிங் ஸ்டைல்: 4 வயது சிறுவனை வீட்டிற்கே அழைத்துப் பாராட்டிய மத்திய அமைச்சர்!

அசத்தும் பேட்டிங் ஸ்டைல்: 4 வயது சிறுவனை வீட்டிற்கே அழைத்துப் பாராட்டிய மத்திய அமைச்சர்!

webteam

சென்னையை சேர்ந்த 4 வயதான இளம் கிரிக்கெட் வீரர் ஒருவரை, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் தன் வீட்டிற்கே அழைத்துப் பாராட்டியுள்ளார்.

அனுபவமிக்க கிரிக்கெட் வீரரை போன்ற பேட்டிங் ஸ்டைலால் சமூக வலைதளங்களில் பிரபலமானவர் சென்னையைச் சேர்ந்த சிறுவன் சனுஷ் சூர்யதேவ். தற்போது 4 வயதான சனுஷ் சூர்யதேவ், தன்னுடைய ஒரு வயது முதலே கிரிக்கெட்டில் அதீத ஆர்வம் கொண்டவர். கிரிக்கெட் ஆர்வத்தாலும், அசத்தும் பேட்டிங் ஸ்டைலாலும் ஆசிய சாதனை புத்தகத்தில் "இளம் தொழில் முறை கிரிக்கெட் வீரர்" என்ற விருதை பெற்றவர். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியும் இவரது பேட்டிங்கை கண்டு நேரில் அழைத்து பாராட்டியிருந்தார்.

இந்நிலையில் இணையத்தில் இவர் விளையாடும் வீடியோக்களை கண்ட மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு, டெல்லியில் உள்ள தனது இல்லத்திற்கு அவரை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். மேலும், தனது கையொப்பமிட்ட பேட் ஒன்றையும் பரிசளித்துள்ளார். சிறுவன் என்றும் பாராமல் விளையாட்டுத் துறை அமைச்சரே திறமையை ஊக்குவித்தது மிகவும் நெகிழ்ச்சியான சம்பவம் என சிறுவனின் பெற்றோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கு ஏற்ப வளர்ந்து வரும் இவர் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரராக உருவாகி இந்தியாவிற்காக விளையாட வேண்டும் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண்ரிஜ்ஜு தெரிவித்துள்ளார்.