விளையாட்டு

மளமளவென விக்கெட்களை பறிகொடுத்து 216-க்கு ஆல்அவுட் ஆனது இலங்கை

மளமளவென விக்கெட்களை பறிகொடுத்து 216-க்கு ஆல்அவுட் ஆனது இலங்கை

webteam

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, இலங்கையை 216 ரன்னில் ஆல்அவுட் செய்துள்ளது.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தம்புல்லாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.

இலங்கை அணியின் டிக்வெல்லா, குணதிலகா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் நிதானமாகவும், அதேவேளையில் சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 14 ஓவரில் 74 ரன்கள் சேர்த்தது. 14-வது ஓவரில் குணதிலகா ஆட்டம் இழந்தார். அணியின் ஸ்கோர் 139 ரன்னாக இருக்கும்போது டிக்வெல்லா 64 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். குஷால் மெண்டிஸ் 36 ரன்கள் எடுத்த நிலையில் அக்சர் பட்டேல் பந்தில் க்ளீன் போல்டானார். இலங்கை அணி 27.1 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்திருந்தது.

அதன்பின் இலங்கையின் விக்கெட்டுகள் மளமளவென சரிய அந்த அணி 43.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 216 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி சார்பில் அக்சர் பட்டேல் 10 ஓவரில் 34 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும், கேதர் ஜாதவ், சாஹல் மற்றும் பும்ப்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்திய அணி விளையாடிக் கொண்டிருக்கிறது.