இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி நடந்து வரும் மெல்போர்ன் மைதானத்தில் இனிவெறி கோஷத்தில் ஈடுபட்ட ரசிகர்களை போலீசார் வெளியேற்றினர்.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில், 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. புஜாரா அபார சதம் அடித்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில், கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும் ஹசல்வுட், லியான் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 151 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. பும்ரா 6 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் களமிறங்கிய இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்யப்பட்டது.
இதையடுத்து முதல் இன்னிங்சின் 292 ரன்கள் முன்னிலையுடன் சேர்த்து இந்திய அணி, 399 ரன்களை ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இந்த இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி உணவு இடைவேளை வரை, 2 விக்கெட் இழப்புக்கு 44 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.
இந்த டெஸ்ட் போட்டியை பார்க்க மெல்போர்ன் மைதானத்துக்கு முதல் நாளில், 73 ஆயிரத்து 516 பேரும் இரண்டாவது நாளில் 33,524 பேரும் மூன்றாவது நாளில் 33,447 பேரும் வந்திருந்த னர்.
இதற்கிடையே இந்த டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிலர் இனவெறியுடன் நடந்து கொண்டனர். இந்திய வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எதிராக அவர்கள் இனவெறியுடன் கோஷம் எழுப்பினர். ‘’உங்க விசாவை காட்டுங்க’’ என்று முதலில் கோஷம் எழுப்பிய அவர்கள், பின்னர், ’விராத் கோலி ஒரு முட்டாள்’ என்று தொடர்ந்து கோபப்படுத்தும் விதமாக நடந்துகொண்டனர். பின்னர் இது தொடர்பான வீடியோ பதிவு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உடனடியாக மைதானத்துக்கு வந்த போலீசார், இனவெறியுடன் கோஷமிட்ட ரசிகர்களை அங்கிருந்து வெளியேற்றினர்.
இதுபற்றி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய செய்தி தொடர்பாளர் கூறும்போது, ‘இனவெறியுடன் நடந்துகொள்வது போன்ற செயல்பாடுகளை ஒரு போதும் சகித்துக்கொள்ள முடியாது. அது ரசிகர்கள், வீரர்கள் அல்லது பணியாட்கள் என யாராக இருந்தாலும் சரி. விக்டோரியா போலீஸ், மெல்போர்ன் ஸ்டேடியத்தை கண்காணித்தபோது சிலர் முறைகேடாக நடந்துகொண்டது தெரிய வந்தது. அவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப் பட்டனர். தொடர்ந்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்’’ என்றார்.